ஆடியன்ஸ் இன்றி நடக்கவுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டி - கோப்பை யாருக்கு ?
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டி பார்வையாளர்கள் இன்றி, இன்று நடைபெறவுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியைக் காண ரசிர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னையின் எஃப்சி மற்றும் அட்லெட்டிக்கோ டி கொல்கத்தா அணிகள் முன்னேறியுள்ளன. இரு அணிகளும் ஏற்கெனவே தலா இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. மூன்றாவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் இரு அணிகளும் கோவாவில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய நேரப்படி இரவு 7.30க்கு போட்டி தொடங்கவுள்ளது.
பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் போட்டி என்பதால், இதனை தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளம் மூலமாக காண இயலும். இந்தப் போட்டி மட்டுமின்றி கொரோனாவால் உலக அளவில் பல போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.