இஷாந்த் ஷர்மாவிற்கு ரூ.2 கோடியா?: அதிர்ச்சியான கவுதம் காம்பிர்
2017 ஐபிஎல் ஏலத்தில் வேக பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது மிக அதிகம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் காம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த வேக பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவை எந்த ஐபிஎல் அணியும் எடுக்க முன் வரவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த காம்பிர், பென் ஸ்ட்ரோக்ஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரில் களம் இறங்கி கடைசி வரை நின்று ஆடி ஒரு போட்டியை ஜெயித்து கொடுக்க முடியும். ஆனால் இஷாந்த் சர்மா போன்ற பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு 4 ஓவர் மட்டுமே இருக்கும் என கூறினார்.
மேலும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறந்து விளங்கும் பல வீரர்கள் வந்துவிட்ட இந்த கால கட்டத்தில், ஐபிஎல் அணிகள் ஆல் ரௌண்டர்களையே விரும்புகின்றன என்றும் காம்பிர் கூறினார். இதுபோன்று பல வீரர்கள் ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டதற்கு அவர்களது அடிப்படை விலை அதிகமாக இருந்ததே காரணம் என்றும் காம்பிர் கூறியுள்ளார்.