”பையா கேப்டன் நீங்க தான்”.. ரோகித் கேள்விக்கு கேலியாக பதில் சொன்ன இஷான் கிஷன்!

”பையா கேப்டன் நீங்க தான்”.. ரோகித் கேள்விக்கு கேலியாக பதில் சொன்ன இஷான் கிஷன்!
”பையா கேப்டன் நீங்க தான்”.. ரோகித் கேள்விக்கு கேலியாக பதில் சொன்ன இஷான் கிஷன்!

கேப்டன் ரோகித் சர்மா, இரட்டை சதமடித்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரிடமும் உரையாடும் கேலியான வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது பிசிசிஐ.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 349 ரன்களை குவித்த இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் த்ரில்லிங் வெற்றியை பதிவு செய்திருந்தது. அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தார். சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷானிற்கு பிறகு இந்திய அணியின் 5ஆவது வீரராக கில் இரட்டை சதத்தை அடித்திருந்தாலும், இளம் வயதில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தினார்.

இதற்கு முன்பாக 24 வயதில் அந்த சாதனையை படைத்திருந்த இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானை பின்னுக்கு தள்ளி, 23 வயதில் இரட்டை சதத்தை பதிவு செய்து சாதனையை படைத்திருக்கிறார் சுப்மன் கில். அதனைத்தொடர்ந்து குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் சுப்மன் கில்.

இந்நிலையில், போட்டிக்கு பிறகு இரட்டை சதங்களை இந்தியாவிற்காக அடித்த இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகிய இரண்டு இளம் வீரர்களிடம் உரையாடல் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. இந்த வீடியோவை பிசிசிஐ தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், கேப்டன் ரோகித் சர்மா இரண்டு பக்கமும் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷனை நிறுத்திவிட்டு நடுவில் நின்றபடி அந்த வேடிக்கையான உரையாடலை தொடங்குகிறார். அதில், “புன்னகை முகத்துடன் என் இருபக்கமும் எண்டர்டெய்னர்ஸ் இருக்கின்றனர். ஒருவர் முன்னதாக ஒரு அபாரமான இரட்டை சதத்தை வங்கதேச அணிக்கு எதிராக எடுத்துவந்தார். இன்னொருவர் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை எடுத்துவந்தார்” என்று தொடங்குகிறார்.

”என் சார்பாகாவும், இஷான் கிஷான் சார்பாகவும் உங்களை இரட்டை சதங்கள் அடித்தவர்களின் கிளப்பிற்கு வரவேற்கிறோம். உங்களுடைய பேட்டிங்கின் ரிதமானது, ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தாலும் மாறவில்லை. சிலருக்கு மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தால் அங்கு நின்று விளையாட வேண்டுமா, இல்லை அதிரடியை தொடர வேண்டுமா என்ற குழப்பம் இருக்கும். ஆனால் நீங்கள் விளையாடிய விதம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது” என்று ரோகித் சர்மா புகழ்ந்தார்.

நடுவில் அவரசமாக பேசிய இஷன் கிஷன், உங்களுடைய போட்டிக்கு முந்தைய தயார்முறை எப்படி இருந்தது, எப்படி தயாரானீர்கள் என்று கேலியாக கேட்டார். அதற்கு பதிலளித்த கில், “ நான் இஷான் கிஷான் அறையை தான் பகிர்ந்திருந்தேன். என்னை தூங்கவிடாமல் என் வழக்கமான தயார்முறை அனைத்தையும் அவகெடுத்துவிட்டார். அவருக்கு ஹெட் போன் பயன்படுத்தும் பழக்கமே இல்லை, லவுட் ஸ்பீக்கரில் படத்தை போட்டு பார்த்துகொண்டிருந்தார். நான் எவ்வளவு கேட்டும் சத்தத்தை குறைக்கவே இல்லை. திட்டி கூட பார்த்துவிட்டேன், அதற்கு இது என் அறை இங்கு என் ரூல்ஸ் தான் என கூலாக பதில் சொன்னார்” என்று சிரித்தபடியே சொன்னார் சுப்மன் கில்.

அப்போது குறுக்கிட்ட இஷான் கிஷான், “ நீங்கள் என் அறையில் தங்கியதால் தான் என்னுடைய ரன்களை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்” என கிண்டல் செய்தார்.

இதனை பார்த்த ரோகித் சர்மா இஷான் கிஷானை கவுக்கும் விதமாக, “ கிஷான் நீங்கள் 200 அடித்திருந்தாலும், ஏன் இலங்கைக்கு எதிரான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என நக்கலாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கிஷன், “பையா கேப்டன் நீங்கள் தான், நீங்கள் தான் என்னை ஆடவைக்கவில்லை” என்று கூற மூன்றுபேரும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். முடிவில் கேப்டன் ரோகித் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

முதல் போட்டியை வென்று இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், நியூசிலாந்து எதிரான இரண்டாவது போட்டியில் வரும் சனிக்கிழமை 21ஆம் தேதி ராய்புரில் விளையாடவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com