“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்
பேட்டிங்கில் தனது மோசமான பாஃர்ம் காரணமாக தனது முடிவுரையை தானே எழுதிக் கொண்டிருக்கிறார் தோனி.
இந்திய அணியின் கேப்டன்களில் மிக முக்கியமான சாதனைகளை படைத்தவர் தோனி. பல்வேறு கோப்பைகளை அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதோடு, பேட்டிங்கிலும் ஒரு காலத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் தூணாக இருந்தவர். தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியை கூட தனது மேஜிக் பேட்டிங்கால் வெற்றி பெற செய்வார். விக்கெட் கீப்பிங்கில் கூட இன்றளவும் அவர் உலக அளவில் சிறந்த வீரராக உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீப காலமாக தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமான தருணங்களில் அவர் பேட்டிங் முந்தைய நிலையில் இல்லை. அதனால் அவர் அணியில் இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விகள் பலராலும் முன் வைக்கப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்து தொடரில் தோனியின் விளையாட்டு மீது விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரும் இடம்பெற்றார். தன் மீதான விமர்சனங்களை தன்னுடைய பேட்டிங் மூலம் தான் தகர்க்க முடியும் என்பது தோனிக்கும் தெரியாமல் இருக்காது. ஆனால், தன் மீது விமர்சனங்கள் எழுவதற்கு ஏன் மீண்டும், மீண்டும் இடம் கொடுக்கிறார் என்றே தெரியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை பொறுத்தவரை இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணி எளிதில் தொடரை வென்று விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி அளித்து வருகிறது. முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இரண்டாவது போட்டியில் நாம் 300 ரன்களுக்கு மேல் அடித்தும் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் போராடி டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அந்த அணி தற்போது வென்றுள்ளது.
மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டர் தான். ராயுடு, தோனி, பண்ட் என எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து ஆடவில்லை. இதில், தோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. கடந்த போட்டியில் தோனி 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்தப் போட்டியில் இக்கட்டான நேரத்தில் 7 ரன்னில் நடையை கட்டினார். இதுபோன்ற எத்தனையோ தருணங்களில் இந்திய அணியை வெற்றி பெற செய்தவர் தான் தோனி.
ஆனால், தோனியின் இந்த பாஃர்ம் அவுட்டை அவரது ரசிகர்களாளே தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையில் சிலர் ஓய்வு பெற்றுவிடுங்கள் என சமூக வலைதளங்களில் உருக்கமாக கூறியுள்ளனர். தன்னுடைய ஆஸ்தான பேட்ஸ்மேன் இப்படி தடுமாறுவதை ஒரு ரசிகனால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். போதாக்குறைக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. ஏற்கனவே அவர் உலகக் கோப்பையில் ஆடுவாரா இல்லை என்பது குறித்து கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், தனது மோசமான பாஃர்ம் காரணமாக தனக்கு தானே தோனி முடிவுரை எழுதி வருகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.