ஐபிஎல் தொடர் இந்திய அணியை பாதிக்கிறதா? ஐபிஎல்-ன் சாதகங்கள்-பாதங்கள் என்னென்ன?

ஐபிஎல் தொடர் இந்திய அணியை பாதிக்கிறதா? ஐபிஎல்-ன் சாதகங்கள்-பாதங்கள் என்னென்ன?
ஐபிஎல் தொடர் இந்திய அணியை பாதிக்கிறதா? ஐபிஎல்-ன் சாதகங்கள்-பாதங்கள் என்னென்ன?

ஐபிஎல் தொடர் பல இந்திய இளம் திறைமைகளை கண்டறிய உந்துததலாக இருந்தாலும், ஐபிஎல் தொடரால் பல குழப்பங்களை இந்திய அணி சந்திப்பதோடு, பல தோல்விகளை அடைந்துவருகிறது என்றால் அதை இல்லை என்று மறுக்க முடியாது. அப்படி ஐபிஎல் தொடர் எந்தளவு இந்திய அணியில் பாதிப்புகளையும், நன்மைகளையும் ஏற்படுத்துகிறது என்று முழு தொகுப்பாய் இந்த பதிவில் பார்ப்போம்.

2007 டி20 உலககோப்பையில் இந்திய அணி வெற்றியும்-ஐபிஎல் தொடர் தொடக்கமும்!

2007 டி20 உலகக்கோப்பையில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, இளம் வீரர்களை கொண்டிருந்தாலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை முக்கியமான போட்டிகளிலும், நாக் அவுட் போட்டிகளிலும் வெற்றிக்கொண்டே டி20 உலகக்கோப்பையை தட்டிச்சென்றது.

2007ற்கு பிறகு 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் இந்திய அணி நிர்வாகமான பிசிசிஐ-ஆல் தொடங்கப்பட்டது. அனைத்துதரப்பு கிரிக்கெட் நாடுகளையும் கவர்ந்த இந்த புதிய முயற்சி, அடுத்தடுத்து ஐசிசி-ன் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணியே அதிகம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் எண்ணியது. ஆனால் அதற்கு மாறாக 2007ற்கு பிறகு இந்திய அணியால் ஒரு டி20 உலகக்கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

ஐபிஎல் தொடரின் பாசிடிவ்!

*அதிக இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் பெரிய களமாக அமைந்தது ஐபிஎல்.

* தமிழ்நாடு கிரிக்கெட் லீக், சையது முஸ்டாக் அலி டிரோபி, விஜய் ஹசாரே டிரோபி என அத்தனை முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடர்களையும் கவனிக்கவும், மேம்படுத்தவும் ஆரம்பித்தது பிசிசிஐ.

*ஆடவர் ஆட்டம் மட்டுமில்லாமல், பெண்களுக்கான தனி டி20 தொடர்களையும் ஆரம்பித்து பெண்களுக்கான அணியையும் மேம்படுத்தும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது.

* ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிரிக்கெட் கனவு நிறைந்த இளைஞர்களும், தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் நுழையும் இலகுவான பாதையை அமைத்த பெருமை நிச்சயம் ஐபிஎல் தொடரையே சாரும்.

ஐபிஎல் தொடரில் இருக்கும் குறைகள் மற்றும் அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்!

* முதல் குறையாக பார்க்கப்பட்டால் வியாபார லாப நோக்கத்தில் மட்டுமே தற்போது ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐ-யும் செயல்பட்டு வருகிறது. அதிக நாட்களையும், அதிக போட்டிகளையும் வைத்திருக்கும் ஒரு தனி கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு அணி 14 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது, அதன் முறையே கடந்த 2022 ஐபிஎல் தொடரில் 74 போட்டிகளில் பங்குபெற்று விளையாடின அனைத்து அணிகளும். அதிக போட்டிகளை கொண்ட டி20 தொடர் என்றால் முதலில் ஐபிஎல் தான் இருக்கிறது.

* தொடர்ந்து அதிக முக்கியத்துவம் ஐபிஎல் தொடருக்கு வழங்கப்படுவதால், இந்திய அணி முன்னதாக பங்கேற்றுவந்த முத்தரப்பு தொடர்கள், ஒரு அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் போன்றவை குறைய ஆரம்பித்துவிட்டன.

* இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஐசிசி தொடருக்கு முன் ஓய்வின்மை, மற்றும் காயம் ஏற்படுவதன் காரணமாக பங்குபெற முடியாமல் போகிறது. ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு ஓய்வெடுக்க 10 நாட்கள் கூட இல்லாத வகையில் ஐசிசி தொடர்களில் பங்கேற்றதால் தான் 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என கிரிக்கெட் வீரர்களே சொல்லும் நிலை ஏற்பட்டது.

* பும்ரா 2022 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனதற்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, “ பும்ரா அதிகம் காயமடையக்கூடிய வீரர் ஆனாலும் அவர் ஐபிஎல்-ல் தொடர்ச்சியாக விளையாடுகிறார்” என்று குறைகூறியிருந்தார்.

* ஐபிஎல் முக்கியத்துவம் காரணமாக நீண்ட நேர கிரிக்கெட் வடிவமான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் விதம் குறைந்துவருவதாகவே தற்போது தெரிகிறது.

இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்!

* முக்கிய குறையாக இருந்துவருவது, ஐபிஎல் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கான பங்களிப்பு இடம் என்பது குறைவாகவே இருந்து வருவது தான். தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் பேட்டர்கள் அதிகளவில் இந்திய பேட்டர்களாக இருப்பார்கள். ஆனால் பந்துவீச்சாளர்கள் என்று வரும் போது அதில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் மட்டுமே பல அணிகளில் இருக்கிறார்கள். சில அணிகளில் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஒரு பவுலரை வைத்துகொண்டு பிரைம் பவுலர்களாக வெளிநாட்டு பவுலர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படி இருக்கையில் பந்துவீச்சு என வரும்போது இந்திய அணியில் முக்கியமான தருணங்களில் பெரிதும் பாதிக்கப்படுவது இந்திய பந்துவீச்சாளர்களாகவே இருக்கிறார்கள்.

* ஐபிஎல்-ல் சிறப்பான பங்களிப்பு தரும் வீரர்கள் வாரியாகவே இந்திய அணியில் இடமளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் அணித்தேர்வில் தொடர்ந்து குழப்பம் இருந்துகொண்டே வருகிறது. யாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், யாரை இரண்டாம் நிலையில் வைக்க வேண்டும் என்ற நிலையில் தெளிவில்லாதவாறே இருந்துவருகிறது.

* இடம் மாறுகிறது: ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்து அணியில் எடுக்கப்பட்டால் குறைந்தளவே அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உலக அளவில் கவனிக்கப்படக்கூடிய ஒரு தொடராக ஐபிஎல் இருக்கும் நிலையில், 2007க்கு பிறகு ஒரு டி20 உலகக்கோப்பையைக்கூட இந்திய அணியால் வெல்லமுடியாத போது, ஏதோ ஒருகுறை இருப்பதாகவே கருதுகிறது. இப்படியே போனால் சென்னை, மும்பை அணிகளிடம் 10-10 கப்புகளும், ஆர்சிபி அணிக்கு கூட கோப்பைகள் கிடைத்தாலும் கிடைக்கும் ஆனால் இந்திய அணிக்கு ஒருகோப்பை கூட கிடைக்காது.

இருக்கும் குறைகளை களைந்து பிசிசிஐ-யும், இந்திய அணியும் ஐசிசி தொடர்களை வெல்லும் முனைப்பில் செயல்பட வேண்டும் என்பது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com