“பும்ராவை காதலிக்கிறேனா?” - நடிகை அனுபமா விளக்கம்
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா கேரளா நடிகையை காதலிப்பதாக பரவும் வதந்தியை அந்த நடிகை மறுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் ஆகியோர் காதலிப்பதாக பல வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் வலம் வருவது வழக்கம். அவற்றில் சில உண்மையாகவும் மாறியிருக்கின்றன. அந்தவகையில் தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பிரபல நடிகை ஒருவரை காதலிப்பதாக ஒரு வதந்தியில் சிக்கியுள்ளார்.
மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவரும் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன. இவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவரின் பதிவு குறித்து மற்றவர் கருத்து பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தி வலுத்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அனுபமா விளக்கம் அளித்துள்ளார். அதில், “நானும் பும்ராவும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பும்ரா மற்றொரு திரைப்பட நடிகையான ராஷி கண்ணாவை காதலிப்பதாக வதந்திகள் பரவின. இதனை ராஷி கண்ணா மறுத்து, “எனக்கு பும்ரா இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டும்தான் தெரியும். அதை தவிர எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

