‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி
பிரீத்தி ஜிந்தா அணியான பஞ்சாப், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் செல்லாததது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுவது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் ‘பிளே ஆஃப்’வாய்ப்பு என்ற முக்கியமான ஆட்டத்தில் களம் இறங்கியது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19.3 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி புனேவில் நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னையை 100 ரன்களுக்குள் சுருட்டினால், ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிளே ஆப் வாய்ப்பை பெறலாம் என்ற கனவுடன் பஞ்சாப் ஆடியது.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நிகிடி மிரட்டினார். அவர் 4 ஓவர்கள் வீசி, வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஷர்துல் தாகூர், பிராவோ, தலா இரண்டு விக்கெட்டுகளை வீத்தினர். அதனை அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை அணி எளிதாக வெற்றி பெரும் நிலை உருவாகியது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கவலையில் இருந்தார்.
ஒரு கட்டத்தில் சோகத்தில் இருந்து மீண்ட பிரீத்தி ஜிந்தா, தனது அணி பிளே ஆஃபுக்கு முன்னேறாத நிலையில், மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறியதாக தெரிகிறது. போட்டியின் நடுவே தன் நண்பர்களுடன் ஒருவருடன் பிரித்தி ஜிந்தா பேசும் காட்சி வெளியாகியுள்ளது, ஆனால் அதில் ஆடியோ இல்லை என்றாலும், அவரது உதட்டசைவை வைத்து பார்க்கையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாததால் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் கூறுவது போல் உள்ளது. இந்நிலையில் பிரீத்தி ஜிந்தா பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.