”சிராஜ், உம்ரான் மாலிக் மட்டும் ஏன்?”..திலகமிடுவதை வைத்தெல்லாம் விமர்சிப்பதா? நியாயமா இது?

”சிராஜ், உம்ரான் மாலிக் மட்டும் ஏன்?”..திலகமிடுவதை வைத்தெல்லாம் விமர்சிப்பதா? நியாயமா இது?
”சிராஜ், உம்ரான் மாலிக் மட்டும் ஏன்?”..திலகமிடுவதை வைத்தெல்லாம் விமர்சிப்பதா? நியாயமா இது?

இன்று காலையிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரையும், ட்விட்டரில் ஒரு தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் புரிதலற்ற ஒன்றாகவே உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நாக்பூர் சென்றுள்ளது. இந்நிலையில், இன்று காலையில் இருந்து ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், இந்திய அணியினர் தங்கும் விடுதிக்கு செல்லும் போது வரிசையாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்முறை வீரர்கள் என அனைவருக்கும் விடுதி சார்பாக திலகமிட்டு வரவேற்பு வழங்கப்படுகிறது. அப்போது சில சப்போர்டிங் ஸ்டாஃப் திலகமிடுவதை வேண்டாம் என மறுத்துவிட்டு செல்கின்றனர். அதே போலவே இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் திலகமிடுவதை தவிர்த்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும், நெற்றியில் திலகமிட வந்ததை தவிர்த்து விட்டு சென்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சில நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, பல பேர் கடுமையான விமர்சனங்களையும் வைத்து டிரோல் செய்ய ஆரம்பித்தது மட்டுமில்லாமல், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக்கை அன்-ஃபால்லோவ் செய்வதாகவும் தெரிவித்தனர்.

சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக்கை கடுமையாக விமர்சித்த ஒருவர், “ இந்த உயரத்திற்கு வந்த பிறகும், சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் திலகமிடுவதை மறுக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தீவிரமான மதவாதிகள்” என்று விமர்சனம் செய்தார்.

மற்றொருவர் கூறுகையில்,” இந்தியாவின் பாரம்பரியமான விஷயத்தை மறுத்து மதசாயம் பூசுவது பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. இது நம் பாரம்பரியத்திற்கு அவமரியாதை செய்வதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒருவர் சிராஜ் மற்றும் உம்ரானை அன் - ஃபால்லோவ் செய்வதாகவே கூறினார். அவரிட்ட பதிவில், “ சிராஜ், உம்ரான் மாலிக் போன்றவர்கள் கடுமையானவர்கள், அவர்கள் திலகமிட்டு கொண்டால் அவர்களது மதத்திற்கு எதிராக போய்விடுவார்கள். நான் அவர்களை பின் தொடர்வதை நிறுத்திவிட்டேன், அடுத்து உங்களுடைய டர்ன்” என அவர்களை அன்-ஃபால்லோவ் செய்த போட்டோவை சேர்த்து பதிவிட்டிருந்தார்.

மற்றொருவர் இந்திய மதச்சார்பின்மையை கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், “பல இந்துக்கள் தங்கள் மதச்சார்பற்ற நம்பிக்கைகளை நிரூபிக்க, மசூதிகள் போன்ற இஸ்லாமிய இடங்களுக்குச் சென்றாலும், முஸ்லீம்கள் மட்டும் மத அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கடுமையான ட்ரோல்களை எதிர்த்த பல நெட்டிசன்கள், இதற்கெல்லாமா விமர்சனம் செய்வீர்கள், திலகமிட்டு கொள்வதும் மறுப்பதும் அவர்களுடைய சொந்த விருப்பம், இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும், அவர்களை போன்று தான் மற்ற இரண்டு நிர்வாகிகளும் திலகமிடுவதை மறுத்தார்கள், அதற்கு அவர்கள் இந்துக்களாக இருந்துகொண்டு இந்து கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள் என்று கூறமுடியுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஒரு டிவிட்டர் வாசி, “ சிலர் தேவையில்லாமல் குறிவைத்து பேசி வருகின்றனர். அந்த வீடியோவில் சிராஜ், உம்ரான் தவிர்ப்பதை போன்றே பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் தவிர்ப்பது நன்றாக தெரிகிறது. ஆனால் இவர்கள் சில வெளிப்படையான காரணங்களுக்காக குறிவைத்து பேசிவருகின்றனர்” என்று கூறினார்.

மற்றொருவர், ” விக்ரம் ரத்தோர் மற்றும் ஹரி பிரசாத் மோஹன் போன்றவர்களும் தான் திலகமிடுவதை தவிர்த்தார்கள். ஆனால் சில பேர் முஸ்லிம் வீரர்களை மட்டும் குறிவைத்து பேசிவருகின்றனர்” என்று கூறினார்.

இன்னுமொருவர், “ சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் என்று கூறி, இதற்கு முன் உம்ரான் மாலிக் திலகமிட்டுகொண்ட இன்னொரு புகைப்படத்தை” பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவானது பழையது போல் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம் பெற்றிருந்தாலும், உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் இந்த வீடியோவானது, சமீபத்தில் இந்தியாவில் நடந்த இலங்கை அல்லது நியூசிலாந்து தொடர்களின் போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com