தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!

தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!

இடியாப்பச் சிக்கல் மிக்க அணியை உருவாக்கி ஆடவிட்டு, படுதோல்வியை சந்தித்தபின் கேப்டன் பக்கம் கேமராவை திருப்புவது அறமான செயலாக இருக்காது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை நேற்று அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் அணிகளை சாய்த்து அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிளே ஆஃப் வரை அவர் வெற்றிகரமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ஜொலித்த தினேஷ் கார்த்திக், டி20 உலகக் கோப்பையில் அணியில் இடம்பெறாத யஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைகின்றனர். இளம் நட்சத்திரங்களாக ஐபிஎல்லில் ஜொலித்த உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

பேட்ஸ்மேன்கள்:

கேஎல் ராகுல் (கேப்டன்),

ருதுராஜ் கெய்க்வாட்,

இஷான் கிஷன்,

தீபக் ஹூடா,

ஷ்ரேயாஸ் ஐயர்,

ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்),

தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),

ஆல் ரவுண்டர்கள்:

ஹர்திக் பாண்டியா,

வெங்கடேஷ் ஐயர்,

சுழற்பந்துவீச்சாளர்கள்:

யஸ்வேந்திர சாஹல்,

குல்தீப் யாதவ்,

அக்சர் படேல் ,

பிஷ்னோய்,

வேகப்பந்துவீச்சாளர்கள்:

புவனேஷ்வர் குமார்,

ஹர்ஷல் படேல்,

ஆவேஷ் கான்,

அர்ஷ்தீப் சிங்,

உம்ரான் மாலிக்.

அதிகமாக கேட்ட அதிருப்திக் குரல்கள் - காரணம் என்ன?

அணி அறிவிக்கப்பட்ட உடனேயே பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்திக் குரல்களும், பாராட்டு மழைகளும் குவிந்தன. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி பெருமளவு விமர்சனத்துக்கு ஆளான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு அணியில் இடமளித்தது அதிருப்திக் குரல்கள் அதிகமாக எழும்ப காரணமாக அமைந்துவிட்டது. ஐபிஎல்லில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, நிதிஷ் ரானா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்காதது அதிருப்தியை கூடுதலாக கிளப்பிவிட்டது.

ஆடும் லெவனை தேர்வு செய்வது பெரும் சிக்கல்!

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் குழுவில் இருந்து ஆடும் லெவனை தேர்வு செய்வது மிகச் சிக்கலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதற்குள் கே.எல்.ராகுலுக்கும், பயிற்சியாளருக்கும் தலைவலியே வந்துவிடும். யாரை எடுப்பது? யாரை விடுவது? என்று சோதனை முயற்சியை இந்திய அணி மேற்கொள்ளக் கூடும். ஆனால் சரியான ஆடும் லெவன் அமைவதற்குள் 2 போட்டிகள் நம் கையை விட்டு போய்விடும் அபாயமும் இருக்கிறது.

நான்கு விக்கெட் கீப்பர்களா? தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா?

அணியின் அதிகாரப்பூர்வ விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், கேப்டன் கே.எல்.ராகுல் என மேலும் 3 விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கேப்டன் என்ற முறையில் கே.எல்.ராகுல் நிச்சயம் ஆடும் லெவனில் இருப்பார். ரிஷப் பண்ட் இல்லாமல் களமிறங்குவதை தவிர்க்க இந்திய அணி யோசிக்கும் என்பதால் அவரும் ஆடும் லெவனில் இருப்பது உறுதி. மீதமுள்ள இருவரில் இளம் வீரர் இஷான் பக்கம் தேர்வுக்குழு சாயவே வாய்ப்பு அதிகம் என்பதால் தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்சில் இருக்கவே வாய்ப்பு அதிகமுள்ளது. 

விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றாலும், அவர் 6,7 இடங்களில் களமிறங்கும் வீரர் என்பதால் அவர் பேட்டிங் ஆடும் சூழல் அமையாமல் கூடப் போய்விடக் கூடும். இந்திய அணியில் இடம்பெறுவதற்காக என்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய தினேஷ் கார்த்திக் தற்போது அணியில் இடம்பெற்று விட்டார். ஆனால் ஆடும் லெவனுக்கான அக்னிப் பரீட்சையில் அவர் எப்படி தேறப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியே!

நான்கு ஓப்பனர்களா?

விக்கெட் கீப்பர் மட்டுமல்லாது ஓப்பனர்களாக கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் இந்த கூட்டணியே ஓப்பனர்களாக களமிறங்க வாய்ப்பு அதிகம். ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்றால் கேப்டன் கே.எல்.ராகுல் 3ஆம் இடத்தில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படும். அவரது சிறப்பான ஓப்பனிங் மொமண்டத்தை அவர் இழப்பது போல ஆகிவிடும் என்பதால் இதை தவிர்க்கவே அணி முயற்சிக்கும்.

ஒரே ஒரு ஆல் ரவுண்டர் தானா?

வதவதவென விக்கெட் கீப்பர்கள், ஓப்பனர்கள் இடம்பெற்றபோதிலும் ஒரே ஒரு ஆல் ரவுண்டர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அது ஹர்திக் பாண்டியா. ஆடும் லெவனில் அனைத்து போட்டிகளிலும் அவர் இடம்பெற்றுவிடுவார். அவரல்லாது வெங்கடேஷ் அய்யரை ஆல் ரவுண்டராக பயன்படுத்த முற்பட்டால், அது எதிரணிக்கு ஜாக்பாட்டாக கூட அமைந்துவிடக்கூடும். அக்சர் படேல் பவுலிங்குடன் சேர்ந்து பேட்டிங்கிலும் இன்னும் சிறப்பாக விளையாடினால் 2வது ஆல் ரவுண்டர் அணியில் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் களமிறங்கலாம்.

பவுலர் தேர்வுதான் அனைத்திலும் கடினமான ஒன்று!

பர்பிள் கேப்புடன் அணிக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார் சஹால். டெத் ஓவர்களில் சிக்கனமாக வீசி எதிரணியை கலங்கடித்தவர் அர்ஷ்தீப் சிங். அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல்லில் இவ்வளவு சிக்கனமாக பந்துவீச முடியுமா என பலரது புருவங்களை உயர்த்த வைத்த புவனேஷ்வர் குமார், ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அதிவேகத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தும் உம்ரான் மாலிக், நெருக்கடியான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர அக்சர் அடேல், பிஷ்னாய், ஆவேஷ் கானும் இடம்பெற்றுள்ளதால் யாரெல்லாம் பந்துவீசப் போகிறார்கள் என்பதை தேர்வு செய்வது மிகக் கடினமான காரியமே! ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப பவுலர்களை அவர்கள் பலம், பலகீனமறிந்து தேர்வு செய்வது மட்டுமல்லாமல் 20 ஓவர்களில் எப்படி அவர்களை பயன்படுத்துவது என்பதும் முக்கியம்.

சரியான ஆடும் வெலனை தேர்வு செய்வது பாதி வெற்றியடைந்ததற்கு சமம் என்பதால் ஆடும் லெவன் தேர்வு மிக முக்கியமானது. இடியாப்பச் சிக்கல் மிக்க அணியை உருவாக்கி ஆடவிட்டு, படுதோல்வியை சந்தித்தபின் கேப்டன் பக்கம் கேமராவை திருப்புவது அறமான செயலாக இருக்காது. உலகக் கோப்பைக்கான ஆடும் லெவன் இந்த தொடரிலிருந்து உருவாகும் என்பதால், அணித் தேர்வில் நிர்வாகம் சரியாக முன்னெடுப்பது மிகவும் அவசியமே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com