ஐபிஎல் தொடரில் அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இதனால் மற்ற வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் தற்போது நடை பெற்று வருகிறது. முதலில் ஷிகர் தவான் பெயர் ஏலத்தில் விடப்பட்டது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டி போட்டன. தவானை ரூ. 5.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் கேட்ட நிலையில் ஹைதராபாத் அணி தக்கவைத்தது.
இதனையடுத்து அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அஸ்வினை எடுப்பதில் அணிகள் இடையே போட்டி நிலவியது. இறுதியில் ரூ 7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. 2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் வருகை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோனி அளித்த பேட்டியில் அஸ்வின் போன்ற உள்ளூர் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.