டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு - சென்னை அணி முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு - சென்னை அணி முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு - சென்னை அணி முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் தலா இரு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் சென்னை அணி 14 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் முனைப்பில் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன.

எழுச்சியை தொடருமா தோனியின் படை!

வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறக் கூடிய தோனி தலைமையிலான SUPERKINGS அணி, நடப்புத் தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வி, அடுத்த ஆட்டத்தில் வெற்றி என்ற நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த சென்னை அணி, பஞ்சாப் அணியுடனான இரண்டாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிக சிரமமின்றி வெற்றியை ருசித்தது. தொடக்க வீரர் ருது ராஜ் கெய்க்வாட் சொல்லி வைத்தது போல் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார்.

மற்றொரு தொடக்க வீரரான டூ பிளஸ்ஸி முதல் ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களை சேர்த்தார். இரு ஆட்டத்திலும் ஆல்ரவுண்டர் மொயின் அலி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சுரேஷ் ரெய்னா, ராயுடு, ஜடேஜா என மத்திய வரிசை பலமாக இருக்கிறது. தீபக் சாஹர், சாம் கரண், ஷர்துல் தாகூர் ஆகிய தரம்வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களும் சென்னை அணியில் உள்ளனர்.

சென்னை அணியை போன்றே ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வி என்ற நிலையில் அடுத்த போட்டிக்கு ஆயத்தமாக நிற்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரர் மனன் வோஹ்ரா சோபிக்காத நிலையில், தொடக்க வீரர்களை ராஜஸ்தான் அணி மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. ஜோ பட்லர் விளாசல் ஆட்டத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியில் சதம் விளாசி அசத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் மத்திய வரிசையில் பெரும்பலமாக இருக்கிறார்.

ஷிவம் துபே, ரியான் பரக், ராகுல் திவேதியா, கிறிஸ் மோரிஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் நிரம்பியிருப்பது ராஜஸ்தான் அணிக்கு பெரும்பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் உனட்கட், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய ஆற்றல் படைத்த வேகப்பந்துவீச்சாளர்களும் ராஜஸ்தான் அணியில் உள்ளனர். மொத்தத்தில் அனுபவ நாயகன் தோனியின் வியூகம் வெல்லுமா ? அல்லது சஞ்சு சாம்சனின் இளமைத் துடிப்பு ஜெயிக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com