மற்ற நாடுகளை காட்டிலும் ஐபிஎல்-க்கு மவுசு அதிகரிக்க காரணம் என்ன? - ’PSL’ நிலை என்ன?

மற்ற நாடுகளை காட்டிலும் ஐபிஎல்-க்கு மவுசு அதிகரிக்க காரணம் என்ன? - ’PSL’ நிலை என்ன?
மற்ற நாடுகளை காட்டிலும் ஐபிஎல்-க்கு மவுசு அதிகரிக்க காரணம் என்ன? - ’PSL’ நிலை என்ன?

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிதான் உலகிலேயே அதிக லாபம் தரும் டி20 லீக்காக மாறியுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த உள்ளூர் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முல்டான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் ஹலந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் முகமது ஹவிஸ் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

இதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சுல்தான்ஸ் அணி. அந்த அணியின் வீரர்கள் சோபிக்காதநிலையில், சுல்தான்ஸ் அணி 19.3 ஓவர்களில் 138 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் லாகூர் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பை வென்றது.

வெற்றிபெற்ற லாகூர் ஹலந்தர்ஸ் அணிக்கு பரிசுத் தொகையாக பாகிஸ்தான் ரூபாயில் 80 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3.40 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. தொடரில் 2-ம் இடம்பிடித்த முல்டான் சுல்தான்ஸ் அணிக்கு பாகிஸ்தான் ரூபாயில் 32 மில்லியன், அதாவது 1.36 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எனினும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் வருமானமும், மற்ற நாடுகளில் நடத்தப்படும் லீக் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் ஒப்பிட்டால் கொசுவிற்கும், யானைக்கும் உள்ள வித்தியாசம் தான்.

பிக் பாஷ் லீக் (பிபிஎல்), பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்), கரீபியன் பிரிமியர் லீக் (சிபிஎல்) போன்ற உலகெங்கிலும் உள்ள மற்ற டி20 லீக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்திய டி20 லீக் வழங்கும் சம்பளம் மிகவும் அதிகம். இதன்மூலம் உலகின் மிகவும் லாபகரமான டி20 கிரிக்கெட் லீக்காக ஐபிஎல் மாறியுள்ளது. 2021-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு அதிகம்.

இதேபோல் ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு அதிகபட்ச ஊதியம் 17 கோடி ரூபாய், ஆனால் பிக் பாஷ் லீக் தொடரில் அதிகபட்ச ஊதியமே 1.9 கோடி ரூபாய் தான். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிகபட்ச ஊதியம் 1.27 கோடி ரூபாய் தான். இதுவே கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் வீரர்களுக்கு 85 லட்சம் ரூபாய் தான். இதனால் தான் வெளிநாட்டு வீரர்களிடையே ஐபிஎல் மவுசு இன்னும் அதிகரித்து காணப்படுவதுடன், உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளுக்கும் முன்னோடியாக ஐபிஎல் திகழ்கிறது.

உண்மையில், பல வீரர்கள் 2-மாதம் ஐபிஎல்-ல் விளையாடுவதற்காக சர்வதேச போட்டிகளை கூட தவறவிடுகிறார்கள். நட்சத்திர அந்தஸ்து வீரர்களை ஒரே அணியில் விளையாட வைக்கும் இந்த ஐபிஎல்-லை அதிக மக்கள் பார்ப்பதை தாண்டி, வீரர்களை விளையாட வைப்பது பணம் தான். ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com