ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்குமா? - பிசிசிஐ விளக்கம்!!
ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனப்பொருட்களை தடை செய்ய வேண்டுமென்றும், சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமென்றும் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டுமென்றும் பலர் கருத்துகளை பதிவிட்டனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இது ஐந்து வருட ஒப்பந்தம். அது முடியும் வரை இது தொடரும். சீன நிறுவனங்களுக்கு உதவுவது என்பது வேறு, சீன நிறுவனங்களிடம் இருந்து நாம் பயன்பெறுவது என்பது வேறு. அந்த வித்தியாசத்தை நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.
சீன நிறுவனங்கள் இந்திய நுகர்வோர்களிடம் தங்களது தயாரிப்புகளை விற்று பணம் ஈட்டுகிறார்கள். அப்படி இருக்க, அதன் லாபத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஸ்பான்சராக வரும் பணத்தை நாம் எப்படி விட முடியும்? ஸ்பான்சர் பெறும் தொகைக்கு வரி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவிற்குத் தான் சாதகம் எனத் தெரிவித்துள்ளார்.