ஐபிஎல் போட்டியில் களமிறங்கி இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள்
பத்தாவது ஆண்டாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட், பல வீரர்களுக்கு ஏணிப்படியாக இருந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அசத்தியதன் மூலம், தேசிய அணியில் இடத்தை உறுதி செய்த வீரர்கள் பலர்.
யூசுப் பதான். முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், அரைசதம் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். ஐபிஎல் போட்டியில் அசத்தியத்தைத் தொடர்ந்து, பங்களாதேஷில் நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு யூசுப் தேர்வானார்.
2010 ஐபிஎல் தொடரில் 458 ரன்கள் குவித்த முரளி விஜய், முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். அதற்கு முன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே ஏற்ற வீரராக முரளி விஜய் பார்க்கப்பட்டார். அந்த பார்வையை மாற்ற உதவியது ஐபிஎல் களம்.
2013 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா, 15 விக்கெட்களை வீழ்த்தினார். ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்காமல், துல்லியமாக பந்துவீசிய மோகித் ஷர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.
2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கணிசமான பங்களிப்பை ஆற்றினார் அக்ஷர் படேல். அந்த சீசனில் 14 விக்கெட்களை வீழ்த்தியதால், 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. 23 வயதான அக்ஷார், தற்போது வரை இந்திய அணிக்காக 30 ஒருநாள் மற்றும் 7 இருபது ஓவர்களில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2015 ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தினார். ஒரே போட்டியில், தேர்வாளர்களை கவனத்தை ஈர்த்த பாண்டியா, தேசிய அணியில் இடத்தை உறுதி செய்தார். ஆல்ரவுண்டரான பாண்டியா, இந்திய அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 19 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.