தோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்

தோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்
தோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்


தோனி, ரோகித், கோலி என கைகோர்த்துகொண்டு இந்தியாடா என விசில் பறக்க கிரிக்கெட் பார்க்கும் கூட்டம், ஐபிஎல் வந்தால் வேறு மாதிரி ஆகிவிடும். சென்னை டா, மும்பை டா, பெங்களூரு டா என ஆளாளுக்கு சண்டை பிடித்துக்கொண்டு கிடப்பார்கள். அந்த அளவுக்கு ஐபிஎல் என்பது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அதிரடி விளம்பரங்கள், பரபரப்பான ஆட்டங்கள் என ஐபிஎல் என்றாலே சுவாரஸ்யம்தான். அப்படிப்பட்ட ஐபிஎல் திருவிழா மார்ச் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புடன் ஐபிஎல் தொடங்கும் என்றாலும் இந்த வருடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் ஐபிஎல்லை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்க ஒரு மிகப்பெரிய காரணம் மகேந்திர சிங் தோனி.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனியை அதற்கு பின் எந்தப் போட்டியிலும் ரசிகர்கள் பார்க்கவில்லை. தோனியின் ரன் அவுட்டுக்கு பிறகு கிரிக்கெட் பார்க்காமல் விட்ட தோனியின் ரசிகர்களும் உண்டு.

இதற்கிடையே தோனியின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டன. இந்த சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

போட்டிக்கு முன்னதாக தோனி எப்போது சென்னை வருவார்? பயிற்சியை எப்போது தொடங்குவார் என்றும் தோனிப்படை காத்துக் கிடக்கிறது. பயிற்சி போட்டியாக தோனி மைதானத்திற்குள் இறங்கும் நாளன்றே சேப்பாக்கம் கூட்டத்தால் நிரம்பவும் வாய்ப்புண்டு என்கின்றனர் தோனி ரசிகர்கள். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அவரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் இந்த ஐபிஎல் சீசன் தோனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் அவ்வளவு முக்கியமாகிறது.

ஈ சாலா கப் நம்தே என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் திணறி வரும் ஆர்சிபி, இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று தீர்க்கமாக இருப்பதாக தெரிகிறது.

லோகோ மாற்றம், பெயர் மாற்றம் என அதிரடியாய் களம் இறங்கியுள்ள ஆர்சிபிஐ, அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்படியும் விராட் கோலி இந்த முறை கோப்பையை வாங்கி பெங்களூருவுக்கு கொண்டு வந்துவிடுவார் என மல்லையா உள்பட ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அதிரடி ஆட்டங்களால் கவனம் ஈர்த்த ரோகித் சர்மாவின் தலைமையில் களம் இறங்குகிறது மும்பை அணி. கடந்த முறை கோப்பையை வென்ற அணி என்பதால் அதே வேகத்துடன் இந்த முறையும் களம் இறங்கவுள்ளது. அதுமட்டுமின்றி சமீப போட்டிகளில் ரோகித் சர்மா வேகம் காட்டி வருவதால் அதே வேகத்தை இந்த ஐபிஎல் போட்டிகளிலும் அவர் எதிரொலிப்பார் என்கின்றனர் மும்பை ரசிகர்கள்.

வரும் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியே சென்னை- மும்பை என்பது இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. இப்படி எல்லா அணிகளின் ரசிகர்களுமே வரும் ஐபிஎல்லை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனால் வரும் ஐபிஎல் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் கோலாகலமாக இருக்கும் என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com