ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய டெல்லி அணியின் கோரி ஆண்டர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சனும், சாம் பில்லிங்சும் அந்த அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இருவரும் 53 ரன்கள் சேர்த்தனர். சாம்சன் 19 ரன்களிலும், பில்லிங்ஸ் 55 ரன்களிலும் ஆட்டம் இழக்க, அடுத்த வந்த கருண் நாயர் ரன் எடுக்காமலும், ஸ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும் நடையை கட்டினர். இறுதி கட்டத்தில் கோரி ஆண்டர்சனின் கோரத் தாண்டவத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. கோரி ஆண்டர்சன் 24 பந்துகளில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்களுடன் 39 ரன்கள் குவித்தார்.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணி, தடுமாறியது. வோரா (3 ரன்), விருத்திமான் சஹா (7 ரன்), அம்லா (19 ரன்), மோர்கன் (22 ரன்), கேப்டன் மேக்ஸ்வெல் (0), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் வரிசையாக நடையை கட்ட, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது பஞ்சாப் அணியால். அந்த அணியில் அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3, ஷபாஸ் நதீம், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், கோரி ஆண்டர்சன், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கோரி ஆண்டர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் தொடர்ச்சியாக சந்தித்த மூன்றாவது தோல்வி இது.