கண்ணாடி மாஸ்க் அணிந்து பந்துவீசிய ரிஷி தவான் - என்ன காரணம்?
ரிஷி தவான் நேற்று ஒருவகையான ‘மாஸ்க்’ அணிந்து பந்துவீசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அது என்ன வகை மாஸ்க், எதற்காக அணிந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து, அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய வீரரான ரிஷி தவான் 6 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கினார்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ரிஷி தவான் விளையாடி இருந்தார். இதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ரிஷி தவானுக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்து வந்த அவர், ரஞ்சி தொடர் மற்றும் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து ஆடி வந்தார். இச்சூழலில் ரிஷி தவானை பஞ்சாப் அணி இந்தாண்டு மெகா ஏலத்தில் 55 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தது.
இந்த சீசனில் இதுவரை எந்த ஆட்டத்திலும் ரிஷி தவான் களமிறங்காத நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார். இதில் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும், சென்னை அணியின் ஷிவம் துபே, எம்எஸ் தோனி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ரிஷி தவான்.
இதனிடையே, ரிஷி தவான் நேற்று ஒருவகையான ‘மாஸ்க்’ அணிந்து பந்துவீசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அது என்ன வகை மாஸ்க், எதற்காக அணிந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து, அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பயிற்சியின்போது ஈடுபட்டிருந்த ரிஷி தவானின் மூக்கு பகுதியில் காயம் ஒன்று ஏற்பட்டது. இதற்காக அவரது மூக்கில் ‘மைனர் ஆபரேஷன்’ ஒன்று செய்யப்பட்டது. அதன் காரணமாகவே ரிஷி தவான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கண்ணாடி மாஸ்க் அணிந்து பந்துவீசினார்.
இதையும் படிக்க: கேட்ச்சை அல்ல; மேட்ச்சை ட்ராப் செய்திருக்கிறீர்கள் - மோசமான ஃபீல்டிங்கால் சொதப்பிய சிஎஸ்கே