ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எப்படி மற்றவர்களுடன் மோதுவார்கள்! வெளியானது அதிரடி அப்டேட்!

ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எப்படி மற்றவர்களுடன் மோதுவார்கள்! வெளியானது அதிரடி அப்டேட்!

ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எப்படி மற்றவர்களுடன் மோதுவார்கள்! வெளியானது அதிரடி அப்டேட்!

15-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் இந்தியாவில் துவங்கவுள்ள நிலையில், 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம், கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 26-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றநிலையில், இந்த ஆண்டு இந்தியாவிலேயே வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் 26-ம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள் முழுவதுமாக மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் உள்ள நான்கு மைதானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. வான்கடே மைதானத்தில் 20, பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 15, டிஒய் பாட்டீல் மைதானத்தில் 20, கஹுஞ்சே மைதானத்தில் 15 என மும்பை மற்றும் நவி மும்பையில் மொத்தம் 55 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பிளேஆஃப் போட்டிகளுக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், அணிகளை இரண்டு குழுக்களாக பிரித்துள்ளது. அந்த குழுவை, கோப்பைகள் வென்றதை வைத்தும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை வைத்தும் வரிசையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் குழுவிலும், நான்கு கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் அணி இரண்டாவது குழுவிலும் இடம்பெற்றுள்ளது.

குழு ஏ: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

குழு பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

ஒரு குழுவில் இருக்கும் அணி, அதே குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அடுத்து, குழு ஏ-யில் இருக்கும் அணி, அதற்கு நேராக குழு பி-யில் இடம்பெற்றிருக்கும் அணிக்கு எதிராக இரண்டுமுறை மோதும். இதனைத் தொடர்ந்து மற்ற குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒருமுறை மோதும். இதன்மூலம் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் மோதுவது உறுதியாகியுள்ளது.

உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி, தனது குழுவில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுடன் தலா 2 முறை மோதும். அடுத்து, அதற்கு நேர் எதிராக குழு பி-யில் உள்ள சென்னை அணியுடன் 2 முறையும் மோதும். இதனைத் தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதற்குமுன் 2011-ம் ஆண்டில் இதே மாதிரியான அட்டவணைதான் பின்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com