சரவெடியாய் வெடித்த மொயின் அலி.. டெஸ்ட் போட்டி ஆடிய தோனி - எகிறி பின் சரிந்த சிஎஸ்கே!

சரவெடியாய் வெடித்த மொயின் அலி.. டெஸ்ட் போட்டி ஆடிய தோனி - எகிறி பின் சரிந்த சிஎஸ்கே!
சரவெடியாய் வெடித்த மொயின் அலி.. டெஸ்ட் போட்டி ஆடிய தோனி - எகிறி பின் சரிந்த சிஎஸ்கே!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் மொயின் அலி இடைவிடாமல் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்த போது எப்படியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களை எட்டும் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு கதை.

சிக்ஸர்.. பவுண்டரி.. பவுண்டரி.. பவுண்டரி.. பவுண்டரி! மொயின் அலி வாணவேடிக்கை

முதல் பவர் ப்ளேவின் 6 ஓவர்களில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது. முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத மொயின் அலி அடுத்த 3 ஓவர்களில் அரைசதமே அடித்துவிட்டார். எப்படியா, மொயின் அலி வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடுத்து பிரசித் வீசிய நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர், அஸ்வின் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசப்பட்டது. இதில் போல்ட் வீசிய ஆறாவது ஓவர்தான் ஹைலைட். அந்த ஓவரில் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த ஐந்து பந்துகளையும் பவுண்டரிகளையும் விளாசி தள்ளினார் மொயின் அலி. அப்போது அவர் அடித்த 59 ரன்களில் ஒரு ரன் தவிர்த்து அனைத்து ரன்களும் சிக்ஸர், பவுண்டரிகளால் பெறப்பட்டவை.

அடுத்தடுத்து வீழ்ந்த மூன்று விக்கெட்!

இப்படித்தான் ஆட்டம் சென்று கொண்டிருந்தது. மீதமுள்ள 14 ஓவர்களிலும் சேர்த்தே சென்னை அணி 75 ரன்கள் தான் எடுத்தது பரிதாபம். ஒரு மேஜிக் போல ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மாற்றினார்கள். எட்டாவது ஓவரில் கான்வே அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஒன்பதாவது ஓவரில் ஜெகதீஸன், 11வது ஓவரில் அம்பத்தி ராயுடு என 10 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணி. அஸ்வின், சாஹல் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தி நிறுத்தினர். மூன்று ஓவரில் 59 ரன்கள் விளாசிய மொயின் அலியால், அடுத்து 11 ஓவர்கள் களத்தில் இருந்த போதும் 35 ரன்களை கூட எடுக்க முடியவில்லை. 93 ரன்களில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் ஆடிய தோனி:

இந்த ஆட்டத்தின் திருப்பு முனையே தோனியின் பேட்டிங் ஃபார்ம் தான். ஒரு சில நேரங்களில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனங்களை குளிர்விக்கும் தோனி. சமீப காலமாக பல போட்டிகளில் மிகவும் நிதானமாக விளையாடி பார்ப்பவர்களை சோதித்துவிடுகிறார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டது என்பது உண்மைதான். ஒரிரு ஓவர்கள் மட்டை போடலாம். ஆனால், டி20 போட்டிகளில் 5, 6 ஓவர்களை விக்கெட் வீழ்ச்சியை தடுக்க எடுத்துக் கொள்வது மிகவும் மோசமான அணுகுமுறை.

டி20 போட்டியை மிடில் ஓவர்களில் சில நேரம் ஒருநாள் போட்டிபோல் ஆட்டலாம். ஆனால், தோனியோ டெஸ்ட் போட்டியை போல ஆடுகிறார். 28 பந்துகளில் வெறும் 26 ரன்கள் மட்டுமே அவர் எடுத்து 19வது ஓவரின் கடைசி பந்தில் நடையை கட்டினார். இதில் ஒரே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி மட்டும்தான். நிறைய டாட் பால்கள். முதலில் நிதானமாக விளையாடினாலும் கடைசி 4 ஓவர்களிலாவது அதிரடி காட்டி ஒரு 170 ரன்களுக்கு மேலாவது கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சில் கலக்கிய ராஜஸ்தான் வீரர்கள்:

முதல் பவர் ப்ளேவில் ரன்களை வாரி வழங்கினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ரன்களை ஷட்டர் போட்டு கட்டுப்படுத்தினர். அஸ்வின் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும், சாஹல் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதெற்கெல்லாம் மேலாக, ஓபெட் மைக்காவ் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி டாப் 4ல் உள்ள அணி என்பதை நிரூபித்துள்ளது.

பட்லரை இழந்தாலும் அதிரடி காட்டும் ராஜஸ்தான்

151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட்டார். பட்லர் வெறும் இரண்டு ரன்களில் விக்கெட் ஆன போதும் ஜெய்ஸ்வாலும், அவருடன் சேர்ந்த கேப்டன் சாம்சனும் அதிரடியை தொடர்ந்தனர். ராஜஸ்தான் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் குவித்தது. ஒவ்வொரு ஓவரிலும் ஓரிரு பவுண்டரிகளை பதிவு செய்தார்கள். பின்னர் ரன் வேகம் குறைந்தது. 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. சாம்சன் 15, படிக்கல் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com