ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழைபெய்து வருவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி துவங்கி, பரபரப்பாக நடைபெற்று வந்த 70 லீக் போட்டிகள் கொண்ட 15-வது சீசன் ஐபிஎல் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இந்த லீக் போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 வெற்றி, 4 தோல்விகளுடன் 20 புள்ளிகளை பெற்று முதல் ஆளாக குவாலிஃபயர் போட்டிக்கு தகுதிபெற்றன.

இதையடுத்து அடுத்த அறிமுக அணியான லக்னோ அணியும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 3-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. மேலும் நல்ல ரன் ரேட் வைத்திருந்த ராஜஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியினை, வெற்றிகொண்டு புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து குவாலிஃபயர் போட்டிக்கு சென்றது. 

மேலும் பெங்களூரு அணி ரன் ரேட் குறைவாக இருந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா இல்லையா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியடைந்ததால், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

தற்போது குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இதில் ரன் ரேட் அடிப்படையில், குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் சுற்றில் 4 அணிகளும் இடம் பிடித்துள்ளன. அதன்படி,

குவாலிஃபயர் 1 : மே 24, குஜராத் மற்றும் ராஜஸ்தான், இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா.

எலிமினேட்டர் : மே 25, லக்னோ மற்றும் பெங்களூரு, இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.

குவாலிஃபயர் 2 : மே 27, குவாலிஃபயர் 1 தோல்வியாளர் மற்றும் எலிமினேட்டர் வெற்றியாளர், இரவு 7.30 மணி, அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம்

பைனல் : இரவு 8 மணி, மே 29, அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம்.

இந்த பிளே ஆஃப் போட்டியில் தான் ட்விஸ்ட் காத்திருக்கிறது. இன்று குவாலிஃபயர் முதல் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ள நிலையில், அங்கு தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் முதல் குவாலிஃபயர் துவங்க உள்ளநிலையில், இரவு 8 மணி முதல் 9 மணி வரை மழைபெய்ய 70 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழையால் யாருக்கு வெற்றிவாய்ப்பு சாதகமாக அமையும் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளின்போது மழை குறுக்கிட்டால் இந்தப் போட்டிகள் மறுநாள் அதாவது ரிசர்வ் டே என்று தனியாக நடத்தப்படமாட்டாது என ஏற்கெனவே ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பிளே ஆஃப் போட்டிகள் மழைக் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டால், ஆட்டத்தை முடிக்க கூடுதல் நேரம் வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் டக்வொர்த் லூயிஸ் (The Duckworth–Lewis–Stern method- DLS method) முறைப்படி போட்டியின் வெற்றியாளர் யார் என்று தீர்மானிக்கப்படுவார்.

டக்வொர்த் விதியை பெரும்பாலும் இரண்டாம் அணிகளுக்கு சாதகமாக கூட பார்க்கலாம். ஏனென்றால், எந்த ஓவரில் எந்த ரன்ரேட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அந்தவகையில் இன்றைய போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் டாஸூம் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வென்று பவுலிங்கை முதலில் தேர்வு செய்யும்போது, கொல்கத்தாவில் தற்போது வீசி வரும் காற்று சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இல்லையென்றால் இரண்டு அணிகளுக்கும் போட்டியின் ஓவர் ஐந்தாக குறைக்கப்படும். அதையும் தாண்டி மழைபெய்தால் சூப்பர் ஓவர் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். மழையின் காரணமாக குவாலிஃபையர் போட்டிகள், எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற முடியாமல் போனால், புள்ளிப்பட்டியலில் 70 போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.

எடுத்துக்காட்டாக குவாலிஃபயர் 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் முதலிடம் பிடித்த குஜராத் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இரண்டாவது இடம் பிடித்த ராஜஸ்தான் குவாலிஃபயர் 2 போட்டிக்கு போகும். அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் மழை பெய்தால் 4-வது இடம் பிடித்த பெங்களூரு எலிமினிட்டாகி வெளியேறும். 3-வது இடம் பிடித்த லக்னோ ராஜஸ்தானுடன் மோத குவாலிஃபயர் 2 போட்டிக்கு செல்லும். பின் குவாலிஃபயர் 2 போட்டியிலும் மழை பெய்தால் ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

பிளே ஆஃப் மற்றும் எலிமினேட்டர் போன்று அல்லாமல், ஐ.பி.எல். இறுதிப்போட்டியின்போதும் மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வே டே நடைமுறை பின்பற்றப்படும். அதாவது, மே 29 அன்று நடக்க இருந்த இறுதிப்போட்டியின்போது மழையின் குறுக்கீட்டால் மறுநாள் மே 30 அன்று நடத்தப்படும். மே 29 அன்று டாஸ் முடிந்திருந்தாலும், ஆட்டம் கைவிடப்படும் நிலையில், மறுநாள் புதிதாக டாஸ் போட்டப்படும். மே 29 ஆம் இறுதிப்போட்டியின் போது டாஸ் வென்று ஒரு பந்து வீசப்பட்டு, ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், மறுதினம் போட்டி பாதியிலிருந்தே தொடங்கப்படும்.

முழுமையாக மழை பெய்து ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் சூப்பர் ஓவரில் கூட வெற்றியாளர் தீர்மானிக்கப்பட முடியாமல் போனால் வேறு வழியின்றி இறுதிப்போட்டியில் விளையாடும் 2 அணிகளில் புள்ளி பட்டியலில் யார் முதல் இடத்தைப் பிடித்தாரோ அவர்களே சாம்பியன் ஆவர். குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய 4 அணிகளில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com