சிக்ஸர் மழை பொழிந்து பயம் காட்டிய ரஸல்.. இறுதியில் கெத்தாக வெற்றி பெற்ற குஜராத் அணி

சிக்ஸர் மழை பொழிந்து பயம் காட்டிய ரஸல்.. இறுதியில் கெத்தாக வெற்றி பெற்ற குஜராத் அணி
சிக்ஸர் மழை பொழிந்து பயம் காட்டிய ரஸல்.. இறுதியில் கெத்தாக வெற்றி பெற்ற குஜராத் அணி

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், 35-வது லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில், நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக முதன்முறையாக பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

குஜராத் அணியில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்டாக, விருத்திமான சாஹா 25 ரன்களில் அவுட்டானார். 3 வீரர்கள் டக் அவுட்டானர். அபினவ் மனோகர் 2 ரன்களிலும், ஜோசப் ஒரு ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே நிதானமாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதேபோல் டேவிட் மில்லரும் 27 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹர்திக் பாண்ட்யா, மில்லர் இணை களத்தில் இருந்த போது அந்த அணி 180-90 ரன்கள் வரை குவிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 3 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்தது. 20-வது ஓவரில் மட்டும் அந்த அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த 4 விக்கெட்டுகளையும் ஆண்ட்ரூ ரஸலே எடுத்தார். டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையடுத்து, 157 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சாம் பில்லிங்ஸ் (4) மற்றும் சுனில் நரேன் (5) அடுத்தடுத்து ஷமி பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். அந்த அணி 16 ரன் எடுப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. நிதிஷ் ராணா 2 ரன்கள் எடுத்த நிலையில், ஃபர்குஷன் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். அத்துடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 12 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கொல்கத்தா அணி 34 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு சற்றே நெருக்கடி உருவானது. சற்று நேரம் நிதானமாக விளையாடிய ரிங்கு சிங்கும் 35(28) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 17 ரன்களில் நடையை கட்டினார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுபுறம் சிக்ஸர் மழை பொழிந்தார். குறிப்பாக தொடக்கத்திலேயே அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துவிட்டார். ஆனால், நோ பால் என அறிவிக்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குஜராத் அணிக்கு பயம்காட்டினார். பேட்டில் பந்து மாட்டினாலே எல்லைக் கோட்டிற்கு அப்பால் சென்று விழுந்தது.

கடைசி ஓவரில் வெறும் 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் ரஸல் இருக்கிறார். முதல் பந்திலும் சிக்ஸர் விளாசி விட 5 பந்துகளில் 12 தேவை. அதனால், எப்படி கொல்கத்தா அணி வெற்றி பெற்றுவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். நேற்றைய போட்டியில் தோனி 4 பந்துகளில் 16 ரன்களை அசால்டாக அடித்துவிட்டார். அதே பாணியில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்த நேரத்தில் இரண்டாவது பந்தில் எல்லைக் கோட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 25 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் அவர் விளாசி இருந்தார். கொல்கத்தா ரசிகர்கள் அப்படியே உறைந்தனர். ரஸல் ஆட்டமிழந்த உடனேயே குஜராத் அணியின் வெற்றி உறுதியானது. 20 ஓவர் முடியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

குஜராத் அணி டாஸ் வென்ற பின்னர் துணிச்சலாக பேட்டிங்கை தேர்வு செய்ததோடு, 156 ரன்கள் மட்டுமே எடுத்து அதற்குள்ளாக கொல்கத்தாவை கட்டுப்படுத்தியும் விட்டது. ஏனெனில் நடப்பாண்டில் இதுவரை நடந்த 34 லீக் போட்களிலும், டாஸ் வெல்லும் அணி, வெற்றிதோல்வியை பற்றி கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு முதலில் பவுலிங்கையே தேர்வு செய்து, எதிர் அணியை பேட்டிங் செய்ய பணிக்கும். இதனால் சேசிங்கில் ஈடுபடும் அணி வெற்றிவாய்ப்பை உறுதி செய்யும் என கேப்டன்கள் நினைப்பது உண்டு. ஆனால் முதல் முறையாக குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அந்த ட்ரெண்டிங்கை மாற்றி பேட்டிங்கை தேர்வு செய்தார். வெற்றியும் பெற்றுவிட்டார். டேபிள் டாப்பர் என்பதை குஜராத் அணி நிரூபித்துவிட்டது.

இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்து புள்ளிப்பட்டியில் முதல் இடத்தில் தொடர்கிறது. 4 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்த ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com