'ஷபாஷ் அஹமது' - பெங்களூருவின் 'காப்பான்' ஈசாலா கேங்; இவரையும் கொஞ்சம் கவனியுங்க!

'ஷபாஷ் அஹமது' - பெங்களூருவின் 'காப்பான்' ஈசாலா கேங்; இவரையும் கொஞ்சம் கவனியுங்க!
'ஷபாஷ் அஹமது' - பெங்களூருவின் 'காப்பான்' ஈசாலா கேங்; இவரையும் கொஞ்சம் கவனியுங்க!

ஐ.பி.எல் தொடர் இரண்டாம் பாதியை எட்டியிருக்கிறது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஆடி ஐந்தில் வென்றிருக்கிறது. இன்னும் 7 போட்டிகள் மீதமிருப்பதால் ரொம்பவே சௌகரியமாக ப்ளே ஆஃப்ஸுக்குள் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு பெங்களூருவிற்கு இருக்கிறது. பெங்களூரு அணியின் இத்தகைய வெற்றிகரமான பெர்ஃபார்மென்ஸுக்கு காரணமான டூ ப்ளெஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ஹேசல்வுட், வனிந்து ஹசரங்கா போன்ற வீரர்களை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த வெற்றிக்களிப்பில் ஒரு வீரரின் பங்களிப்பை யாருமே அங்கீகரிக்கவில்லையோ என தோன்றுகிறது. அவர் ஷபாஷ் அஹமது.

ஆல்ரவுண்டரான ஷபாஷ் அஹமது கடந்த இரண்டு சீசன்களிலுமே கூட பெங்களூரு அணிக்காகத்தான் ஆடியிருந்தார். அவரை மீண்டும் பெங்களூரு அணியே ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனிலும் பெங்களூரு அணிக்காவே ஆடி வருகிறார். ஆனால், கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் அணியின் வெற்றியில் ஷபாஷ் அஹமதுவின் பங்களிப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது.

கேங்ஸ்டர் திரைப்படங்களில் பெரிய பெரிய டான்களுக்கு தளபதிகளாக ஒவ்வொரு செய்கையிலும் அவருக்கு தோளோடு தோளாக நிற்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கும் அல்லவா? அதேமாதிரியான கதாபாத்திரத்தைதான் இந்த முறை பெங்களூரு அணிக்காக ஷபாஷ் அஹமது செய்து கொண்டிருக்கிறார். டூ ப்ளெஸ்சிஸின் நிதான ஆட்டத்திற்கும், தினேஷ் கார்த்திக்கின் அதிரடிக்கும் உற்ற தோழனாக தோள் கொடுத்து அவற்றை மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களாக மாற்றி வருகிறார்.

இந்த சீசனில் 7 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியிருக்கும் ஷபாஷ் அஹமது, 171 ரன்களை 147 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 42.75 ஆக இருக்கிறது. ஷபாஷ் அஹமது ஆடியிருக்கும் 5 இன்னிங்ஸ்களுமே இக்கட்டான சூழலில் அணி சரிவிலிருக்கும் போது அணியை தூக்கி நிறுத்தும் வகையில் ஆடப்பட்ட இன்னிங்ஸ்கள். டூ ப்ளெஸ்சிஸ், தினேஷ் கார்த்தின் போன்றோரின் ஆட்டங்கள் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாற காரணமானவை.

பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியில் ஷபாஷ் அஹமதுவுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 128 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய போட்டியிலேயே ஷபாஷ் அஹமது முதன்முதலாக பேட்டோடு களமிறங்கினார். 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பெங்களூரு இழந்திருந்த இக்கட்டான சூழலில் உள்ளே வந்தார். ரூதர்போர்டோடு இணைந்து 39 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். 20 பந்துகளில் 27 ரன்களை அடித்திருந்தார். குறைவான ஸ்கோராக தெரிந்தாலும், சேஸ் செய்ததே குறைவான ஸ்கோர்தான் என்பதால் இந்த பங்களிப்பே ரொம்பவே முக்கியமானதாக மாறிப்போனது.

ராஜஸ்தானுக்கு எதிராக 169 ரன்களை சேஸ் செய்த போதும் பெங்களூரு அணி ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. ஸ்கோர் போர்டில் 61 ரன்னிலிருந்து 62 ரன்னாக மாறுவதற்குள் 3 விக்கெட்டுகளை பெங்களூரு இழந்திருந்தது. சாஹல் தனது ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். நெருக்கடியான அந்த சூழலில் உள்ளே வந்த ஷபாஷ், 26 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருப்பார். தினேஷ் கார்த்திக்கோடு மட்டும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். இந்த பார்ட்னர்ஷிப்தான் பெங்களூரு அணிக்கு அந்த போட்டியையே வென்று கொடுத்தது.

மும்பைக்கு எதிரான அடுத்த போட்டியில் ஷபாஷ் அஹமதுவுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை. சென்னைக்கு எதிராக 200+ சேஸிங்கின் போதும் பெங்களூரு திணறவே செய்தது. 42-3 என்ற மோசமான நிலையிலிருந்த சமயத்தில் ஷபாஷ் அஹமது உள்ளே வந்தார். 27 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். பிரபுதேசாயுடன் 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். ஷபாஷ் அஹமது விரைவாக எடுத்த இந்த ரன்கள் சென்னை அணிக்கு கொஞ்சம் உதறலை கொடுத்திருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியிலும் பெங்களூருவின் டாப் ஆர்டர் கொஞ்சம் ஆட்டம் கண்டது. 75-4 என்ற சூழலில் ஒரு பெரிய டார்கெட்டை செட் செய்ய வேண்டிய நெருக்கடியில் ஷபாஷ் அஹமது உள்ளே வந்தார். இந்த போட்டியில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்தார். கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். தினேஷ் கார்த்திக்கோடு மட்டும் 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். ஒரு முனையில் மேலும் விக்கெட்டை விட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு அழுத்தம் ஏற்றாமல், அவருக்கு உறுதுணையாக நின்று தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட உதவியிருப்பார்.

கடைசியாக ஆடிய லக்னோவிற்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். டாப் ஆர்டர் பவர்ப்ளேயிலேயே காலியான நிலையில் டூ ப்ளெஸ்சிஸுடன் நின்று 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். இந்த போட்டியில் கட்டுக்கோப்பாக 4 ஓவர்களையும் வீசி வெறும் 25 ரன்களை மட்டுமே கொடுத்திருப்பார்.

ஷபாஸ் அஹமது ஆடியிருக்கும் அத்தனை இன்னிங்ஸ்களுமே நெருக்கடியான சமயத்தில் வந்தவை தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து அணி சரிவை நோக்கி பயணிக்கும் தொடங்கும் நேரங்களில் அதற்கு தடைக்கல்லாக ஷபாஷ் அஹமது இருந்திருக்கிறார். மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்களை கட்டியெழுப்பி அணியை சரிவிலிருந்து மீட்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். தினேஷ் கார்த்திக்கிற்கும் டூ ப்ளெஸ்சிஸுக்கும் செகண்ட் ஃபிடல் ஆடி அவர்களை மேட்ச் வின்னராகவும் மாற்றியிருக்கிறார். பெங்களூரு அணியின் வெற்றியில் ஷபாஷ் அஹமதுவின் பங்களிப்பை தவிர்த்துவிடவே முடியாது. ஆனாலும், பெரிதாக கொண்டாடப்படாமலேயே இருக்கிறார். ஈசாலா கேங் இவரையும் கொஞ்சம் கவனிக்கவும்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com