”மிகவும் பெருமைப்படுகிறேன்” - கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம், கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பெங்களூரு ஐடிசி கார்டினியா ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன. எனவே மொத்தம் 10 அணிகளும் சேர்ந்து மொத்தமாக 551.7 கோடிக்கு 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.
அதிகபட்சமாக இஷான் கிஷனை ரூ.15.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலுத்தில் எடுத்தது. தீபக் சாஹருக்கு ரூ.14 கோடி கொடுத்து எடுத்தது சிஎஸ்கே. ஸ்ரேயாஸ் ஐயரை கே.கே.ஆ.ர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது. ஐ.பி.எல். போட்டி விரைவில் துவங்க உள்ளநிலையில், கொல்கத்தா அணிஅந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை நியமனம் செய்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த இயான் மோர்கனை, இந்தமுறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் தெரிவிக்கையில், கே.கே.ஆர். போன்ற ஒரு மதிப்புமிக்க அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்களை இந்த ஐ.பி.எல். போட்டி ஒன்றிணைக்கிறது. மேலும் திறமையான வீரர்களை கொண்ட சிறந்த குழுவை வழிநடத்த நான் காத்திருக்குகிறேன். இந்த அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த கே.கே.ஆரின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஆதரவு தந்த ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் அணியின் இலக்குகளை அடைய சரியான ஒருங்கிணைப்பை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று நான் நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் ஈடன் கார்டன்ஸ் மிகவும் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் எங்கள் ரசிகர்கள் பெருமைப்படும் அளவில் ஒரு அணியாக எங்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் : ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், ரகானே, ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாப இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், அஷோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான் ஆகியோர் உள்ளனர்.