SRH vs RCB - : ஆட்டத்தை மாற்றிய டாப் 10 திருப்பு முனைகள்..!
ஐபிஎல் போட்டிகள் என்றாலே பரபரப்புக்கும் திருப்பு முனைகளுக்கும் பஞ்சமே இருக்காது. அப்படிதான், ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே துபாயில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியிலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பல்வேறு திருப்பு முனைகள் இருந்தன. பெங்களூரு அணி அசத்தலாக வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் டாப் 10 தருணங்களை இனி பார்க்கலாம்.
1. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை ஹைதராபாத் அணியின் வெற்றியை தட்டிப் பறித்தவர் சாஹல் தான். பேரிஸ்டோவ் களத்தில் இருந்தவரை ஆட்டம் ஹைதராபாத் பக்கம் தான் இருந்தது. அரைசதம் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து தனி ஆளாக சென்று கொண்டிருந்த பேர்ஸ்டோவை தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் போல்ட் ஆக்கினார் சாஹல். இது ஹைதராபாத் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது. அத்தோடு விட்டாரா சாஹல், அடுத்த பந்திலே வந்த வேகத்தில் விஜய் சங்கரையும் போல்ட் ஆக்கி நடையை கட்ட வைத்துவிட்டார். அப்பொழுதே பெங்களூரு அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
2. அடுத்ததாக முக்கியமான தருணம் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் எதிர்பாராத ரன் அவுட் தான். ஹைதராபாத் அணியின் பலமே வார்னரின் அதிரடிதான். பெரும்பாலான போட்டிகளில் எப்படியும் அரைசதம் கடந்துவிடுவார் இந்த மனிதர். அதுவும் பெங்களூரு அணி என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு முன்னர் பெங்களூர் அணிக்கு எதிராக வார்னர் 9 போட்டிகளில் 7 அரைசதம் மற்றும் ஒரு முறை சதம் அடித்து பெங்களூரு அணியை கதிகலங்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட வார்னர் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரில் பேர்ஸ்டோவ் நேர் திசையில் வேகமாக அடிக்க அது உமேஷ் கைகளில் பட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்துவிட்டது. வார்னர் க்ரீஸ்க்கு வெளியே இருந்ததால் அவர் ரன் அவுட் ஆக நேர்ந்தது.
3. அடுத்ததாக, பெங்களூர் அணி வெற்றி பெற முக்கியமான அடித்தளமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கலின் அசத்தல் ஆட்டம்தான். முதல் ஐபிஎல் போட்டிதான் என்பதை நம்ப முடியாத அளவிற்கு அவரது ஆட்டம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அவரது ஷாட்கள் அனைத்து கிளாசிக் ரகம் தான். 8 பவுண்டரிகளை விளாசிய அவர், 42 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். அவரது பேட்டிங்கால் பெங்களூர் அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெயில் விட்டுச் சென்ற இடத்தை நிச்சயம் நிரம்புவார் என்ற நம்பிக்கையை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் பட்டிக்கல்.
4. பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு சாஹல் எடுத்த விக்கெட்டுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம். என்னதான் பட்டிக்கலும், ஃபின்சும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்து இருந்தாலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறும் நிலைக்கு சென்றுவிட்டது. கடைசி நேரத்தில் தன்னுடைய 360 டிகிரி ஆட்டத்தை காட்டி ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் என்ற மிகச் சரியான டார்கெட் வைக்க உதவினார். 30 பந்துகளில் டிவில்லியர்ஸ் 51 ரன்கள் விளாசியிருந்தார்.
5. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை விஜய் சங்கர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என மூன்று தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இதில் சேலத்தைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜனுக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டி. முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அடுத்த மூன்று ஓவர்களை கச்சிதமாக வீசினார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஐபிஎல் தொடரில் இவரது முதல் விக்கெட்டே விராட் கோலிதான். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது நிச்சயம் நடராஜன் உடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக அவரது நினைவில் நிற்கும்.
6. ஹைதராபாத் அணிக்கு கடைசி நேர நம்பிக்கையாக இருந்தவர் ரஷித்கான் தான். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி அவர் அணியை ஜெயிக்க வைப்பார் என ஹைதராபாத் கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், சைனியின் பந்து வீச்சில் அவர் க்ளீன் போல்ட் ஆகி நடையை கட்டிவிட்டார். அதே ஓவரில் தான் புவனேஸ்வர் குமாரையும் போல்ட் ஆக்கி வெளியேற்றி இருந்தார் சைனி. சைனியின் அடுத்தடுத்த இந்த இரண்டு விக்கெட் பெங்களூரு அணியின் வெற்றியை சந்தேகமே இல்லாமல் உறுதி செய்தது.
7. பேர்ஸ்டோவின் விக்கெட் தான் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தது எப்படி அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்ததோ, அதேபோல் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய பேர்ஸ்டோவ் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்ததும் அந்த அணிக்கு சோதனை செய்துவிட்டது. அப்படியென்றால் நிலைத்து நின்று விளையாடும் வீரர்கள் போட்டியை இறுதிவரை சென்று முடிக்க வேண்டும் இல்லையென்றால் இப்படிதான் சொதப்பலாக முடிந்துவிடும்.
8. ஹைதராபாத் அணிக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்தது மார்ஷ்க்கு ஏற்பட்ட காயம் தான். தான் வீசிய முதல் ஓவரிலேயே கீழே விழுந்து காயமாகி வெளியேறிவிட்டார் மார்ஷ். மார்ஷ் 4 பந்துகள் மட்டுமே வீசியிருந்த நிலையில் மீதமுள்ள இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். அந்த இரண்டு பந்துகளில் தான் இரண்டு நோ பந்துகளையும், ஒரு ஓயிடையும் வீசி கடுப்பேற்றினார் விஜய் சங்கர். இரண்டு பந்துகளில் 10 ரன்கள் வாரிக் கொடுத்திருந்தார். பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி ஹைதராபாத் ரசிகர்களை டென்ஷன் ஆக்கினார்.
9. ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரை அதிகப்படியான தோல்விகளை சந்தித்து வந்த அணியில் முக்கியமானது பெங்களூரு அணிதான். அந்த அணியின் வரலாறு அப்படி சோகமானதாக இருக்கையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
10. ஐபிஎல் போட்டிகளில் 180, 200 ரன்கள் என்பது மிகவும் எளிதாக அடிக்கக் கூடியதாக இருந்த காலம் போய், தற்போது 160 ரன்கள் எடுத்தாலும் எதிரணியை வீழ்த்த முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை இந்தப் போட்டி உறுதி செய்துள்ளது.