சென்னை சூப்பர் கிங்ஸ் 'ப்ளேயிங் 11' யார் யார் ?
ஐபிஎல் தொடர் 2008ஆம் தொடங்கப்பட்டபோது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது. ‘எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க’, ‘எங்கத் தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேயையும் கொண்டாடி தீர்த்தனர். 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த ரசிகர்கள் கூட்டம் இன்று பல மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் பார்வையாளர்களின் வரவேற்பையும் ஐபிஎல் தொடர் பெற்றிருக்கிறது.
உலகக் கோப்பை என்றாலும், உள்ளூர் கோப்பை என்றாலும் சரிக்கு சமமான பலத்துடன், பல போட்டிகளின் பகையுடன் மோதும் இரண்டு அணிகளின் போட்டிக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும். அதுபோன்று ஐபிஎல் போட்டியில் எதிர்பார்ப்பு எகிரும் போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதும் போட்டியில் தான். இந்த இரண்டையும் ஐபிஎல் தொடரின் அணிகள் என்று சொல்வதை ஐபிஎல் அசுரன்கள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இரண்டு அணிகளுமே பலத்திலும் சரி, வியூகத்திலும் சரி ஒன்றுக்கு ஒன்று குறைந்ததல்ல. இந்த இரண்டு அணிகளும் நாளை நடைபெறவுள்ள நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ளன.
இந்த அணிகளின் மோதலால் சமூக வலைத்தளங்கள் இப்போதே ஸ்தம்பிக்க ஆரம்பித்திருக்கிறது. ஹிட் மேன் ரோகித் என பெருங்கூட்டமும், தல தோனி என்று மாபெரும் கூட்டமும் சமூக வலைத்தளங்களில் கொடிபிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். நாளையப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற கடும் கருத்துமோதல்களும், விவாதங்களும் இரு அணி ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு அணிகளின் பலத்தையும், அணியில் இடம்பெறப்போகும் வீரர்களை பலரும் கணித்துக்கொண்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே-வை பொறுத்தவரை அணியில் இடம்பெறவுள்ள 11 பேர் யார் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. பலரும் தங்களுக்கு தெரிந்த கிரிக்கெட் கணிப்புகளை வைத்து 11 பேர் கொண்ட அணியின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் அந்த 11 பேர் யார் என்று சென்னை கேப்டன் தோனிக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் தான் தெரியும். இருப்பினும் கிரிக்கெட் வல்லுநர்களின் பார்வையில் இருந்தும், சென்னை அணி வீரர்களின் பட்டியலில் இருந்தும், இதற்கு முன்னர் நடந்திருக்கும் ஐபிஎல் தொடர்களின் கணிப்பின்படியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நாளை இடம்பெறப் போகும் 11 பேர் யார் யார் ? என்பதை காண்போம்.
நாளைய போட்டியில் சென்னை சூப்பர் அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இடம்பெறலாம். 2வது இடத்தில் களமிறங்கும் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாததால், அவருக்கு பதில் தென்னாப்பிரிக்க வீரர் ஃபஃப் டூப்ளெசிஸ் இடம்பெற வாய்ப்புண்டு. அதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், 5ஆம் இடத்தில் கேப்டன் தோனியும் களமிறங்கலாம். வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்தில் ஆல்ரவுண்டரான பிராவோ களமிறங்க வாய்ப்பு அதிகம்.
அவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், பின்னர் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாயும் அணியில் இடம்பெறுவார்கள். பின்னர் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி இடம்பெறலாம். மேலும், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர் கடைசி வீரராக இருப்பார். இந்த அணியில் முரளி விஜய் இடம்பெறவில்லை என்றால், அவருக்கு பதிலாக கேதர் ஜாதவும், இதேபோன்று லுங்கி நிகிடி இல்லையென்றால் அவருக்கு பதில் ஷர்துல் தகூருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம்.