தோனியின் சீருடையுடன் ஃபோட்டோ எடுத்துள்ள ஜோஸ் பட்லர்... வைரலாகும் புகைப்படம்.!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் மகேந்திர சிங் தோனியின் சீருடையை கையில் ஏந்தியவாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
களமிறங்கும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப்க்கான வாய்ப்பு நீடிக்கும் என்ற நெருக்கடியில் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அபுதாபியில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ரன்களைச் சேர்க்க திணறிய சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பவர் பிளே சரியாக அமையவில்லை. பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஸ்மித் மற்றும் பட்லர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 17.3 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைக் கடந்தது ராஜஸ்தான் அணி. பட்லர் 70 ரன்களுடனும், ஸ்மித் 26 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி அவரது 200வது போட்டியாகும். ஐபிஎல் போட்டியில் 200 போட்டிகள் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் மகேந்திர சிங் தோனியின் சீருடையை கையில் ஏந்தியவாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தோனி தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியில் உடுத்திய சீருடை என்பதன் நினைவாக, அவரது ரசிகரான பட்லர் அதை பெற்றுக் கொண்டார் என்ற தகவல்களுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.