ஐபிஎல் 2020 : நிறைவேறுமா டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கோப்பை கனவு..!
வரும் சனிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்ற பெருங்கனவோடு களம் இறங்க உள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் 12 முறை விளையாடியுள்ள அனுபவம் டெல்லி அணிக்கு இருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை டெல்லி வென்றதில்லை.
அதற்காக எத்தனையோ முறை வீரர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் என பலரையும் மாற்றி பார்த்தது. இருப்பினும் பல வீரர்கள் வந்தார்களே தவிர கோப்பை கனவை மெய்ப்பிக்கவில்லை.
இனி டெல்லி அவ்வளவு தான் என்ற பேச்சு எழுந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் டெல்லி அணியின் பேட்டிங் ஆலோசகராக 2016இல் நியமிக்கப்பட்டார்.
அது முதலே அணிக்குள் பரிசோதனை முயற்சியாக பல மாற்றங்களை மேற்கொண்டார் அவர். குறிப்பாக இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் மாதிரியான இளம் பேட்ஸ்மேன்களை டெல்லி அணிக்காக ஏலத்தில் எடுத்தார்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை மடைமாற்றிக் கொண்டே இருந்த டெல்லி அணி கடந்த 2019இல் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள அணியாக மாறியது.
சென்டிமெண்டாக டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரையும் டெல்லி கேப்பிடல்ஸ் என மாற்றியது.
எப்படியும் டெல்லி 2019இல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என எதிர்ப்பார்த்த சூழலில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறி புள்ளி பட்டியலில் சிறந்த அணிகளில் மூன்றாவதாக இடம்பெற்று அசத்தியது.
‘கடந்த சீசனில் செய்த தவறுகளை எல்லாம் களைந்து இந்த முறை அதே உத்வேகத்தோடு விளையாடி கோப்பையை வெல்வோம்’ என சூளுரைத்த பின்பே டெல்லி கேப்பிடல்ஸ் அணி துபாய்க்கு சென்றது.
டெல்லி இம்முறை கோப்பையை வெல்லுமா? பிளஸ், மைனஸ் என்ன?
பேட்டிங் டிப்பார்ட்மென்டில் செம ஸ்ட்ராங்காக உள்ள ஐபிஎல் அணிகளில் டெல்லியும் ஒன்று.
ஷிக்கர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா இணையர் பேட்டிங் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்வார்கள். தொடர்ந்து அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பண்ட், வெஸ்ட் இண்டீசின் ஹெட்மயர், ரஹானே, அக்சர் பட்டேல், வெஸ்ட் இண்டீசின் கீமோ பால், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் அலெக்ஸ் கேரி என பலர் பேட்ஸ்மேன்கள் டெல்லிக்காக விளையாட உள்ளார்கள்.
குறிப்பாக டாப் ஆர்டரில் டெல்லி அற்புதமான அணி. லோயர் மிடில் ஆர்டரில் விளையாட போகும் பேட்ஸ்மேன்கள் தான் யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. இருப்பினும் இந்த பேட்டிங் படையை கொண்ட டெல்லி அணி ரன்களை சேஸ் செய்யவும், டார்கெட்களை செட் செய்யவும் முடியும்.
மாடர்ன் டே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வார்கள். அதற்கு ஒரு சேம்பிள் தான் டெல்லி அணியின் பேட்டிங் லைன் அப்.
அதே நேரத்தில் பவுலிங்கில் வேகப்பந்து வீச்சில் தென்னாபிரிக்காவின் ரபாடா மட்டுமே பவர் பிளே மற்றும் இறுதி ஓவர்களில் டெல்லிக்காக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துபவராக பார்க்கப்படுகிறார். அவருடன் இஷாந்த் ஷர்மா மற்றும் மோகித் ஷர்மா பவுலிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீசினால் ரன்களை கட்டுப்படுத்தலாம்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான துபாய் ஆடுகளத்தில் அஷ்வின், மிஸ்ரா ஸ்பின் இரட்டையர்கள் டெல்லிக்காக அசத்தலாம்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியை பயிற்சியாளராக வழிநடத்துவது ஆன்-டைமில் களத்தில் பல வியூகங்களை அமைக்கவும் உதவலாம்.
2008 மற்றும் 2009இல் அரையிறுதி வரை டெல்லி முன்னேறியுள்ளது. 2012 மற்றும் 2019இல் மூன்றாவது இடத்தை டெல்லி அணி ஐபிஎல் தொடரில் படைத்துள்ள அதிகபட்ச சாதனை.
இளமை பிளஸ் அனுபவம் என வீரர்கள் சரியான கலவையில் வீரர்கள் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ளதால் இந்த முறை துபாயில் டெல்லி அணி கில்லியாக விளையாடி கோப்பையை வெல்லலாம்.
இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன்னும் டெல்லி தான் இந்த முறையை ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.