மும்பையிடம் தொடர்ந்து தோற்ற சென்னை - தோனி கண்ட சூட்சமப் ‘புள்ளி’..
ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான கண்ணோட்டங்கள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான மோதல் கணிப்புகள் தற்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல் என்றாலே ஆரம்பம் முதலே அதிரடியாய் வெற்றிகளை குவிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டும் பெரும்பாலும் சறுக்கி விடுகிறது. இதனால் சென்னை ரசிகர்களும் ஏமாற்றம் அடைகின்றனர். யாரிடம் வேண்டுமானாலும் தோற்றுக்கொள்ளுங்கள், ஆனால் மும்பையிடம் தோற்றுவிடாதீர்கள் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வந்து குமுறுவதும் வழக்கமான கதை. மும்பையிடம் சென்னை தோற்றாலோ அல்லது சென்னையிடம் மும்பை தோற்றாலோ அன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் இரு அணியின் ரசிகர்களாலும் அலறிப் போகும்.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் மோதிக்கொள்ளும் போதும், சென்னை மற்றும் மும்பை போட்டிகள் என்றாலே பெரும் கவனிப்பு தான். ஏனென்றால் இரு அணிகளின் பங்காளிப் பகையும் அவ்வளவு இருக்கிறது. 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில், சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் மட்டுமே மொத்தம் 4 முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறையும் வென்றுள்ளது.
2010-ஆம் ஆண்டு இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 168 ரன்களை குவித்தது. மும்பையிடம் ஹர்பஜன் சிங், மலிங்கா, ஜாகிர் கான், பொலார்ட் என வலுவான பவுலிங் இருந்தும், அதனை எதிர்த்து அடிக்கும் பேட்டிங் வலுவுடன் சென்னை இருந்தது. 169 என்ற இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை அணி, 146 ரன்களில் சுருண்டது. மும்பையில் சச்சின் மட்டுமே 48 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியில் முரளிதரன் மட்டுமே அனுபவம் வாய்ந்த பவுலராக இருந்தார். மற்றவர்கள் இளம் வீரர்கள் தான். இருந்தாலும், தோனியின் தலைமையில் சென்னை வென்றது.
இதைத்தொடர்ந்து 2013, 2015 மற்றும் கடைசியாக நடந்து முடிந்த 2019 ஆகிய மூன்று ஐபிஎல் போட்டிகளிலும் மும்பையிடம் சென்னை தோல்வியை தழுவியது. அதே தோனி தான் இந்த மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தார். இருந்தாலும், தோல்விக்கு காரணம் தோனியல்ல. 2013-ஆம் ஆண்டில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி, 148 ரன்கள் சேர்த்தது. அதனை எதிர்த்து ஆடிய சென்னை அணி, 125 ரன்களில் சுருண்டு போனது. அன்று சென்னையிடம், சரியான பவுலிங் இருந்த போதிலும், நிலையான பேட்டிங் இல்லை. தோனி மட்டுமே இறுதிவரை அவுட் ஆகாமல் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து போராடினார். ஆனாலும் மலிங்கா, ஜான்சன், ஹர்பஜன், பொலார்ட் என அதிரடி பந்துவீச்சில் சென்னையை வீழ்த்தியது மும்பை.
2015-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் அசுர பலத்துடன் இருந்த மும்பை அணி முதலில் களமிறங்கியது. சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியின் பவுலிங்கையும், மும்பை பேட்ஸ்மேன்கள் பந்தாடினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 202 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை எதிர்த்து ஆடிய சென்னை, 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த முறையும் மலிங்கா, மெக்லெனகன் மற்றும் ஹர்பஜன் என மிரட்டும் பவுலிங்கை வைத்து சென்னையை மடக்கிவிட்டது மும்பை.
இதைத்தொடர்ந்து கடைசியாக நடந்து முடிந்த 2019-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த முறை சென்னை பதிலடி கொடுத்து தோல்வியை சமன் செய்யும் என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. சென்னையில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தஹிர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதைத்தொடர்ந்து ஆடிய சென்னை அணி சீரான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தாலும், மும்பை பவுலிங்கிடம் தாக்கு பிடிக்க முடியாமல், ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பும்ரா, மலிங்காவும் சென்னை பேட்ஸ்மேன்களை சரித்தனர். இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
மும்பையிடம் சென்னை அடைந்த 3 தோல்விகளுக்குமே முக்கிய காரணம், மும்பையின் சிறப்பான பந்துவீச்சுதான். இதனை சுதாகரித்துக்கொண்ட தோனி, தனது அணியின் பலத்தை கூட்டுவதற்கு மும்பை போன்றே சிறப்பான பவுலிங்கை தேர்வு செய்ய முடிவெடுத்தார். அதன் எதிரொலியாக தான் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில், பியூஷ் சாவ்லா, ஜாஸ் ஹஸ்ல்வுட், சாய் கிஷோர் மற்றும் சாம் குரான் ஆகிய பவுலர்களை தோனி வாங்க வைத்துள்ளார். எந்தப் புள்ளியில் மும்பையிடம் தோற்றோமோ அதே புள்ளியில் தாங்கள் நின்று விளையாட வேண்டும் என நினைத்து இந்த திட்டத்தை தோனி செய்திருக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.