அடுத்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பதினோறாவது ஐபிஎல் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பனிரெண்டாவது ஐபிஎல் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதியில் இருந்து மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
’எந்த விதமான சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறோம். தேர்தல் நடப்பதாக இருந்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்துவோம். தென்னாப்பிரிக்காவை விட, யுஏஇ-யின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு தோதாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் அங்கு நடத்த முடிவு செய்துள்ளோம். துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் போட்டி நடக்கும்’ என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே 2009-ல் தென்னாப்பிரிக்காவிலும் 2014-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.