என்னதான் ஆச்சு பெங்களூர் அணிக்கு ? - கலங்க வைத்த நபி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து வெளுத்தனர். சிக்ஸரும், பவுண்டரிகளாக அடித்து நொறுக்கினர். அதேபோல், சளைக்காமல் ஓடிஓடி இரண்டு ரன்களை எடுத்தனர்.
கடைசி வரை இருவரையும் பெங்களூர் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பேர்ஸ்டோவ் 52 பந்துகளிலும், வார்னர் 54 பந்துகளிலும் சதம் விளாசினர். பேர்ஸ்டோவ் 114 (55) ரன்னில் ஆட்டமிழக்க, வார்னர் 100 (55) ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
ஹைதாராபாத் அணியின் பேட்டிங் வானவேடிக்கையாக இருக்க, பெங்களூர் அணி அதற்கு நேர்மாறாக விளையாடியது. முகமது நபியின் சுழல் பந்துவீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் பார்த்திவ் படேல் 11, ஹெட்மயர் 9, ஏபி டிவில்லியர்ஸ் 1, துபே 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். விராட் கோலியும் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். போதாதற்கு மொயின் அலி ரன் அவுட் ஆனார். பெங்களூர் அணி 35 ரன்னிற்கு 6 விக்கெட்களை இழந்து பறிதாபமான நிலைக்கு சென்றது. பெங்களூர் அணியின் இந்த சரிவு அதன் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏற்கனவே, சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலும் பெங்களூர் அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியிலாவது ஆறுதல் அடைய சென்னை அணியும் இறுதிவரை விளையாடி வெற்றி பெற்ற விஷயம் இருந்தது. இந்தப் போட்டி அப்படியல்ல. டிவில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட தரமான பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பெங்களூர் அணி சொதப்பி வருகிறது.
பெங்களூர் அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது.