முதலிரண்டு இடத்தை தக்க வைக்குமா டெல்லி - ராஜஸ்தான் முதலில் பேட்டிங்
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இன்றும் நாளையும் தலா இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மீதமுள்ள நான்கு போட்டிகள் முதல் இரண்டு இடத்திற்கான போட்டியாகவும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணி எது என்பதையும் தீர்மானிக்கும்.
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
டெல்லி அணியில் சுஷித் மற்றும் மோரிஸுக்கு பதிலாக கீமோ மற்றும் இஷாந்த் சர்மா களமிறங்குகின்றனர். ஸ்மித்திற்கு பதிலாக இஷ் சோதியும், உனாட்கட்டிற்கு பதிலாக கௌதம் களமிறங்குகிறார். ராஜஸ்தான் அணிக்கு கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை. ஆனால், டெல்லி அணிக்கு இது முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தினை அது தக்க வைக்க வாய்ப்புள்ளது.
டெல்லியை பொருத்தவரை மிகப்பெரிய பலமாக வேகப்பந்துவீச்சாளர் ரபாடா காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். கடந்த மாதம் 28 ஆம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது.
பின்னர், உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதால் ரபாடா தாயகம் திரும்பிவிட்டார். இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. ரபாடா 25 விக்கெட் எடுத்து பர்பிள் கேப்பை இன்னும் தக்க வைத்துள்ளார்.