‘கோலியுடன் ஒரு செல்ஃபி’ - 16 வயதில் கோடீஸ்வரரான இளம் வீரரின் ஆசை

‘கோலியுடன் ஒரு செல்ஃபி’ - 16 வயதில் கோடீஸ்வரரான இளம் வீரரின் ஆசை

‘கோலியுடன் ஒரு செல்ஃபி’ - 16 வயதில் கோடீஸ்வரரான இளம் வீரரின் ஆசை
Published on

ஐபிஎல் ஏலத்தில் 16 வயதுடைய பெங்களூர் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், ரூ1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

அதிக அளவில் பணம் புழங்கும் விளையாட்டாக ஐபிஎல் இருந்து வருகிறது. என்னதான் சூதாட்ட புகார்கள் எழுந்தாலும், ஐபிஎல் தொடருக்கான மவுசு இன்னும் குறையவில்லை. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருக்கிறது. உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்தது. 

இதில், பெங்களூர் வீரர் பிரயாஸ் ராய் பர்மனை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ரூ1.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் மிகவும் குறைவான வயதில் கோடிகளில் விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். வெறும் 20 லட்சம் ரூபாய் தான் பர்மனுக்கு தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதனைவிட பல மடங்கு அதிக விலைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பர்மன் 2002, அக்டோபர் 23இல் பிறந்தவர். அவரது தந்தை ஒரு மருத்துவர். டெல்லியில் வளர்ந்த அவர், மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் கிரிக்கெட் மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்தார். 16 வயதுக்குட்பட்டோருக்கான பெங்கால் அணியில் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக கொல்கத்தாவில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் தங்கி போட்டிகளில் பங்கேற்றார். 

16 வயதான பர்மன் கடந்த செப்டம்பர் மாதம் முதல்தான் உள்ளூர் போட்டிகளில் விளையாட தொடங்கினார். பெங்கால் அணிக்காக மொத்தம் 9 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் பெங்கால் அணிக்காக பிரயாஸ் ராய் பர்மன் விளையாடினார். லெக் ஸ்பின்னரான இவர் 11 விக்கெட்களை சாய்த்ததோடு, 9 கேட்சுகளையும் பிடித்தார். ஏ பிரிவு போட்டியில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான சிறப்பாக விளையாடி 4 விக்கெட் சாய்த்த போதும், ரஞ்சி தொடரில் பெங்கால் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆனால், எதிர்பாராத வகையில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்ததோடு, ரூ1.5 கோடிக்கு அவர் ஏலமும் எடுக்கப்பட்டுள்ளார். விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய டி20 அணியில் விளையாட முதலில் வாய்ப்பு கிடைக்கும். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விராட் கோலியுடன் செல்ஃபி எடுப்பதுதான் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று பர்மன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் உள்ள மற்ற இளம் வீரர்களைப் போல் எனக்கும் விராட் கோலிதான் ரோல் மாடல். அவருடன் ஒரு செஃல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதற்காக நிறைய முறை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், என்னுடைய ஆஸ்தான ஹீரோ உடன் ஓய்வு அறையில் உரையாடப் போகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com