“தோனி இன்னும் எவ்வளவு நாள் ஆடுவார்” - ஃபிளமிங் சூசகம்
உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு தோனி விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருடன் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் அவரது ஆட்டம் மந்தமாக இருந்ததால், உடனடியாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தினர்.
ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜனவரி மாதம் நடந்த ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்தார். அதனால், அவர் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, அணியை வழிநடத்த கேப்டன் விராட் கோலி திணறி வருவதால், தோனியின் தேவை இன்னும் அதிக அளவில் உள்ளது. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவர் விளையாடுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான ஃபிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை விளையாட தோனி விரும்புகிறார் என்று தெரிவித்த அவர், உலகக் கோப்பைக்கு பின்னர் அவர் விளையாடுவாரா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
“உலகக் கோப்பை வரை தோனி நிச்சயம் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. உலகக்கோப்பைக்கு பிறகும் அவர் விளையாட விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. அது குறித்து நாங்கள் பேசியதேயில்லை. எங்களுக்கு இடையிலான பெரும்பாலான கலந்துரையாடல் என்பது உலகக் கோப்பை வரையிலான ஆட்டம் குறித்துதான். கடந்த 12 மாதங்களாக அவர் அனுமானங்களின் அடிப்படையில் தான் பதில் கூறினார்.
சென்னை அணியில் இந்தத் தொடர் முழுவதும் அவர் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதன் பிறகு என்ன செய்வது என்பது குறித்து மதிப்பீடு செய்வோம். தொடர்ந்து விளையாடுவது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் சரியாக விளையாடுகிறார். சரியாக வழிநடத்துகிறார். மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இந்த மூன்றும் இருப்பதால் இன்னும் நீண்ட காலம் அவர் விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.