ஸ்ரேயாஸின் பக்குவத்திற்கு பாராட்டு - ரிஷப் பண்ட் மீது விமர்சனம்
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான வெளியேற்றுச் சுற்றுப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியில் 20வது ஓவரை பவுல் வீசினார். அந்த ஓவரில் 5வது பந்தினை அவர் ஓயிடாக வீசினார். அந்த பந்து கீப்பர் வசம் சென்றது. அதனையடுத்து, பந்தை எதிர் கொண்ட ஹூடா ரன் எடுக்க முயற்சித்தார்.
ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அங்கிருந்து ரன்னர் பக்கம் உள்ள ஸ்டம்பை நோக்கி பந்தினை வீசினார். அப்போது, பந்துவீசிய பவுல் நடு கிரீஸில் நின்று கொண்டிருக்க, ஹூடா அவர் மீது மோதி தடுமாறி விழுந்தார். பண்ட் வீசிய பந்து நேராக ஸ்டம்பில் பட்டது. ஹூடா அவுட் ஆனார்.
ஆனால், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் வேண்டாம் என நடுவரிடம் கூறினார். பவுல் தடுத்ததால் தான் ரன் அவுட் ஆனார் ஹூடா. இல்லையெனில் விக்கெட் விழாமல் இருந்திருக்கும். நடுவரிடம் விக்கெட் வேண்டாம் என கூறிவிட்டு ஸ்ரேயாஸ் பீல்டிங் கூட திரும்பிவிட்டார். ஆனால், ரிஷப் பண்ட் ஓடிவந்து விக்கெட் வேண்டும் என முறையிட்டார். அவரிடம் ஸ்ரேயாஸ் பேசிப்பார்த்தார். ஆனால், விக்கெட் வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால், நடுவர் விக்கெட் கொடுத்தார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவிற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால், அதேசமயம் ரிஷப் பண்டை பலரும் விமர்சித்துள்ளனர். விதிமுறைகளின்படி அது விக்கெட் தான். நியாயப்படி விக்கெட் வேண்டாம் என்று கூறுவது ஒரு சரியான அணுகுமுறைதான் என சிலர் கூறியுள்ளனர். ரிஷப் பண்ட் இன்னும் பக்குவப்பட வேண்டுமென்று சிலர் விமர்சித்துள்ளனர். அதேபோல், தான் எடுத்த முடிவில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறியிருந்தனர்.

