ஐபிஎல் பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 187 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களுர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் மலிங்கா இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியின் ரோகித் சர்மா மற்றும் டி காக் நல்ல துவக்கம் அளித்தனர். இருவரும் முதலாவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் சேர்த்தனர். டி காக் 20 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்திருந்தப் போது சஹால் சுழலில் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் 3 சிக்சர்கள் விளாசினார். எனினும் அவர் சஹாலின் சுழலில் 23 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய போலார்டு(5) மற்றும் குருனல் பாண்ட்யா(1) சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் ஹர்திக் பாண்ட்யா அபாரமாக விளையாடி 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியுடன் 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 187 ரன்கள் சேர்த்தது. பெங்களுர் அணி சார்பில் சஹால் அசத்தலாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்துடன் சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பெங்களுர் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது மும்பை அணி.