கே.எல்.ராகுல் அரைசதம் - மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இரண்டாவது வெற்றி
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
ஐபில் தொடரில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரிகளாக விளாசிய ரோகித் 18 பந்துகளில் 32 அன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்ய குமார் யாதவும் 11 ரன்னில் நடையை கட்டினார்.
ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்தாலும் டி காக் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். டிகாக் 60(39) ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து யுவராஜ் சிங் 18(22), பொல்லார்டு 7(9) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 19 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முருகன் அஸ்வின், முகமது சமி, விஜியோன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து 177 ரன்களை இலக்காக கொண்டு கிங்ஸ் லெவன் அணி விளையாடியது. தொடக்க ஆட்டகாரரான கெயில் மற்றும் ராகுல் பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் எடுத்தனர். கிறிஸ் கெயில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்திருந்த போது குருணால் பாண்ட்யாவின் சுழலில் வெளியேறினார். அதன்பின்னர் வந்த மாயன்க் அகர்வால் ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
இரு வீரர்களும் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிதடித்தனர். அதிலும் குறிப்பாக ஹர்திக் மற்றும் குருணால் பாண்ட்யா பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 64 ரன்கள் குவித்தனர். அகர்வால் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் அரைசதம் கடந்து பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் குருணால் பாண்ட்யா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். மாயங்க் அகர்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.