‘வார்னர் மீது ஆரம்பத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை’ - விவிஎஸ் லக்ஷ்மண்
தற்போதைய ஐபிஎல் தொடரில் நிச்சயம் 500 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என டேவிட் வார்னர் உறுதி அளித்து இருந்ததாக விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 692 ரன்கள் குவித்து டேவிட் வார்னர் முதலிடத்தில் இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையொட்டி அவர் தாயகம் திரும்பி விட்டார். 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி, ஒரு சதம், 8 அரைசதம் அடித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் கிட்டதட்ட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 143.86 ரன். அவருடைய பேட்டிங் சராசரி 69.20 ரன். இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.
இந்நிலையில், டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்த போது நடந்த நிகழ்வுகளை பற்றி விவிஎஸ் லக்ஷ்மண் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அவர் எழுந்தியுள்ளார். அதில், “அணியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, எங்களுடைய தலைமை பயிற்சியாளர் டாம் மோடியை தொடர்பு கொண்டு நிச்சயம் இந்தத் தொடரில் 500 ரன்கள் அடிப்பேன் என வார்னர் உறுதி அளித்திருந்தார். தான் அளித்த இலக்கை அற்புதமாக எட்டிவிட்டார்.
டேவிட் வார்னரை பற்றி என்ன சொல்வது?. அவருக்கு கடந்த ஆண்டு மிகவும் கொந்தளிப்பானதாக இருந்தது. மூட்டு வலியும் இருந்தது. இந்தத் தொடரின் தொடக்கம் எங்களுக்கு கொஞ்சம் கவலை இருந்தது. பயிற்சியின்மையால் கொஞ்சம் விளையாட சிரமப்படுவார் என நினைத்தோம். ஆனால், எங்களுடைய எல்லா எண்ணங்களை உடைத்து எறிந்து அற்புதமாக பேட்டிங் செய்தார். தன்னை மனரீதியாக வலிமைப்படுத்திக் கொண்டார். அவருடைய மனைவி கண்டிஸ் பக்க பலமாக இருந்து மிகப்பெரிய ஆதரவை அளித்தார்” என்றார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதால் ஓராண்டிற்கு ஐபிஎல் உட்பட எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. தடைக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, தன்னுடைய அதிரடியால், எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.