‘இப்படியொரு மிராக்கில் நடந்தால்’ - பெங்களூர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு..!
தொடர் தோல்வியால் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மிகமிக குறைந்த அளவில் உள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 47 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 9 போட்டிகளே மீதமுள்ளன. பிளே ஆஃப் வாய்ப்புகளை பொருத்தவரை, இரு அணிகள் அதனை உறுதி செய்துவிட்டன.
முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பின்னர் டெல்லி கேபிடல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மும்பை இண்டியன்ஸ் அணியும் 14 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பினை நெருங்கிவிட்டது. இருப்பினும், இன்னும் அந்தக் கோட்டினை வெற்றிகரமாக தாண்டவில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதிக வாய்ப்பு
பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை பொருத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த அணிகள் அனைத்தும் தலா 5 போட்டிகளில் வென்றுள்ளன. இதில் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில், மற்றவர்கள் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அந்த இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த இரு அணிகளில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகம். கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்து விளையாட உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் இருக்கும்.
கடைசி இடம்தான்..ஆனால் வெளியேறவில்லை
இத்தகைய சூழலில், புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகச்சிறிய வாய்ப்பு உள்ளது. 99 சதவீதம் அந்த அணிக்கு வாய்ப்பில்லைதான். இருப்பினும் அந்த ஒரு சதவீதத்தில் ஏதேனும் ஒரு மிரக்கில் நடந்தால் பெங்களூர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும். ஐபிஎல் தொடரை பொருத்தவரை மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொருத்து ஒரு அணியில் நிலை மாறும்.
பெங்களூர் அணியை பொருத்தவரை முதல் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றிபெற்று நம்பிக்கை அளித்தது. இருப்பினும், நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றியும், 8இல் தோல்வியும் அடைந்துள்ளன. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ளன.
அது என்ன மிராக்கில்?
புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள், கீழே உள்ள அணிகளுடனான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல், ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் 12 புள்ளிகளை தாண்டக் கூடாது. குறிப்பாக ஹைதராபாத் அணி அனைத்து போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். பெங்களூர் அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
போட்டியின் முடிவுகள் இப்படி இருந்தால்....
48வது லீக் - ஏப்.29 ஹைதராபாத்-பஞ்சாப் : பஞ்சாப் (வெற்றி)
49வது லீக் - ஏப்.30 பெங்களூர் - ராஜஸ்தான்: பெங்களூர் (வெற்றி)
50வது லீக் - மே 1 சிஎஸ்கே - டெல்லி (யார் வென்றாலும் பிரச்னை இல்லை)
51வது லீக் - மே 2 மும்பை - ஹைதராபாத் : மும்பை (வெற்றி)
52வது லீக் - மே 3 பஞ்சாப் - கொல்கத்தா : கொல்கத்தா (வெற்றி)
53வது லீக் - மே 4 டெல்லி - ராஜஸ்தான் : டெல்லி (வெற்றி)
54வது லீக் - மே 4 பெங்களூர் - ஹைதராபாத் : பெங்களூர் (வெற்றி)
55வது லீக் - மே 5 பஞ்சாப் - சிஎஸ்கே : சிஎஸ்கே (வெற்றி)
56வது லீக் - மே 5 மும்பை - கொல்கத்தா : மும்பை (வெற்றி)
மேலே கூறியுள்ளதுபோல் போட்டியின் முடிவுகள் அமைந்தால், சிஎஸ்கே அல்லது டெல்லி அணி 20 புள்ளிகளை பெறும். மும்பை 18 புள்ளிகளை பெறும். பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் ஒரு அணி பிளே ஆஃப் வாய்ப்பை எட்டிவிடும்.