சிஎஸ்கே சுழலில் கட்டுப்பட்ட டெல்லி - இறுதிப் போட்டிக்குள் நுழையுமா சென்னை?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ்வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னில் சாஹர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
சற்று நேரம் நிலைத்து நின்ற ஷிகர் தவான் 18 ரன்னில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து முன்ரோ 27, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் மூவரும் அற்புதமாக பந்துவீசி விக்கெட்களை சாய்த்தனர்.
விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால், அக்சர் படேல் 3, ரூதர் போர்டு 10, பவுல் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ரிஷப் பண்ட்டும் 38(25) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர். இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட் எடுத்தார். 148 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்ததால் 120 ரன்களுக்குள் டெல்லியை சென்னை அணி கட்டுப்படுத்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்கப்பட்டது. சென்னை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட் பறிகொடுக்காமல் விளையாடினாலே எளிதில் இந்த ரன்னை அடிக்க முடியும்.