இந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா ?

இந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா ?

இந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா ?
Published on

ஐபிஎல் போட்டிகள் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளன. இதனால் ஐபிஎல் திருவிழா நாடு முழுவதும் களைகட்ட உள்ளது. இம்முறை அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் யார் ? மேலும் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம் என கூறப்படும் முக்கியமான 5 வீரர்களை கொஞ்சம் பார்க்கலாம்.

ஷேன் வாட்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில்தான் முதன் முதலாக சிஎஸ்கே அணியில் இணைந்தார் ஷேன் வாட்சன். ஐபிஎல் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் உள்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தாலும், கடந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களை குவித்தார். வாட்சனின் ஸ்டிரைக் ரேட் 154 என அதகளம் செய்தார். சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் செய்ததெல்லாம் மேஜிக். இப்போது 37 வயதான ஷேன் வாட்சன், அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எனவே இந்தாண்டும் தன்னுடைய சரவெடி ஆட்டத்தை வாட்சன் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவராஜ் சிங் - மும்பை இந்தியன்ஸ்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சிங்கம், யுவராஜ் சிங். 2011 இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ். 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனும் இவர்தான். இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த யுவராஜ் சிங், 2013 ஆம் ஆண்டுக்கு பின்பு அணிக்குள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார். திடீரென ஃபார்முக்கு வருவார் பின்பு காணாமல் போவோர். இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே யுவராஜ் சிங்கை 2015 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்தது. யுவராஜூக்கும் இப்போது 37 வயது. இந்த ஐபிஎல் போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் இந்த பஞ்சாப் சிங்கம் நிச்சயம் கர்ஜிக்கும். 

ஏபி டி வில்லியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மைதானத்தில் புகுந்தால் 360 டிகிரிக்கும் பேட்டை சுழற்றும் புயல் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியின் சாதனை வீரர். பல ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். அது என்ன ராசியோ தெரியவில்லை, டி வில்லியர்ஸ் அணியில் இருந்தும் பெங்களூர் அணியால் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது டி வில்லியர்ஸ்க்கு 36 வயதாகிறது, ஏற்கெனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால். இந்த ஐபிஎல் தொடரும் அவருக்கு இறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ் கெயில் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

மேற்கு இந்திய தீவுகளின் தனித்துவமிக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில். அதிரடி மன்னன் பல ஆண்டு காலமாக பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இதுவரை இவர் ஐபிஎல் தொடர்களில் மட்டும் 3994 ரன்களை எடுத்துள்ளார். 40 வயதாகிவிட்ட கிறிஸ் கெயில், இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார். யுவராஜ் சிங் போலவே கிறிஸ் கெயிலையும் ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. பின்பு, இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

இம்ரான் தாஹிர் - சென்னை சூப்பர் கிங்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர், 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்தாண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தாஹிக் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் எழுதியும், பேசியும் கலகலப்பாக்குவார். விக்கெட் எடுத்துவிட்டால் இரு கைகளையும் பறவை போல விரித்து மைதானத்தை சுற்றும் தாஹிருக்கு, சென்னை ரசிகர்கள் "பராசக்தி எக்ஸ்பிரஸ்" என பெயர் வைத்தனர். ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு பின்பு ஓய்வுப் பெறவுள்ளதாக தெரிவித்துள்ள தாஹிருக்கு இதுதான் கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com