‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்
சென்னை அணியின் வெற்றி தொடர்பாக, சென்னைத் தமிழில் ஹர்பஜன் சிங் கலக்கல் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2018ஆம் ஆண்டு சீசனின் 20வது போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று இப்போட்டியில், சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்து வீச தீர்மானத்ததால், சென்னை அணி களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சென்னை அணியில், அம்பத்தி ராயுடு 79* (37), ரெய்னா 54 (43), தோனி 25 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்குமார் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் 183 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் வெற்றி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங், “ வீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை கிட்டயே ச்சலம்பலா. இங்க ஃபேமஸ் தம் பிரியாணி சாப்புட வரல தம் பிடிச்சி வெளயாட வந்தோம். சாலா பாஹ உந்தி சஹார் சிரக தீஸ்தாவுறா ஒப்பனிங் ல இறக்குவோம் அம்பத்தி ராயுடுவ. பௌலர்ஸ்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன்ரைசர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.