சிக்ஸர்கள் பறக்கவிட்டு ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்திய தோனி..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு வாட்சனும், டு பிளிசிஸும் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரில் 48 ரன்கள் எடுத்தனர். டு பிளிசிஸ் 27, வாட்சன் 36, ரெய்னா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயுடு 21 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். சென்னை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.
பின்னர் தோனியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். தோனி அவ்வவ்போது சிக்ஸர்கள் விளாசி ரசிகர்கள் குஷிப்படுத்தினார். இருப்பினும் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூவ் சாவ்லா சென்னை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். தோனியை அடிக்க விடாமல் ஜடேஜா பந்துகளை வீணடித்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 4 சிக்ஸர்கள் விளாசினார். ஜடேஜா 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியில் பியூவ் சாவ்லா, சுனில் நரேன் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். 178 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.