சிக்ஸர்களாக பறக்கவிட்டு சென்னை ரசிகர்களை சோதித்த ரஸ்ஸல்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் சுனில் நரேன் வழக்கம் போல் சிக்ஸர்கள் விளாசினர். இருப்பினும், 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் லையன்(22), உத்தப்பா(29), தினேஷ் கார்த்திக் (26) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. அதனால், விரைவில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஸல் ஆட்டத்தையே மாற்றினார். சிக்ஸர்களாக பறக்கவிட்டு சென்னை ரசிகர்களை நோகடித்தார். ஆட்டத்தின் 16.2வது ஓவரில் அவர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. பந்து மைதானத்திற்கு வெளியே செல்வதை அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வியந்து பார்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
குறிப்பாக பிராவோ ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினர். இதனால் கொல்கத்தா அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. ஆட்டத்தின் கடைசி பந்திலும் ரஸல் சிக்ஸர் அடிக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இதில் 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் இதுதான் அதிகபட்ச ரன்.