சீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா? இன்று பரபரப்பு கிளைமாக்ஸ்!
பதினோறாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின், கிளைமாக்ஸ் இன்று! மட்டையோடும் பந்துகளோடும் தீவிரப் பயிற்சியில் திரண்டி ருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் அணிகள்!
எட்டு அணிகள் பங்கேற்ற இந்த திருவிழா கடந்த மாதம் 7-ம் தேதி, மும்பையில் தொடங்கியது. 56 லீக் சுற்று முடிந்து அடுத்து பிளே ஆப் சுற்றுகள். கடைசியில் கிளைமாக்ஸில் வந்து நிற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸும் ஐதராபாத் சன் ரைசரும்! மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற ரசிகர்களின் ஏக்கமான கேள்விக்கு கிடைத்துவிடும் விடை.
ஐபிஎல் ஏலம் முடிந்த பின், சிஎஸ்கே மீது ரசிகர்களால் முன் வைக்கப்பட்ட விமர்சனம். ‘இது சென்னை கிங்ஸா, சீனியர் கிங்ஸா? வயசானவங் களையா எடுத்திருக்காங்க?’ என்பது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனியர்ஸ்தான் கெத்து என்று கொத்தாக ஃபைனலுக்கு வந்திருக்கி றது சிஎஸ்கே.
தோனி தலைமையிலான சிஎஸ்கே ஏற்கனவே 2010, 2011 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை வென்றிருக்கிறது. இரண்டு ஆண்டு கால தடைக்குப் பின் தில்லாக இறங்கிய சிஎஸ்கே, ‘திரும்பி வந்துட்டோம்னு சொல்லு’ என்று நெஞ்சு நிமிர்த்தினார்கள். கிளைமாக்ஸ் வரை வந்து தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள் சொன்னது போலவே!
சிஎஸ்கே-வின் பலம் அசத்தல் பேட்டிங். அம்பத்தி ராயுடு, வாட்சன், சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ், கேப்டன் தோனி ஃபார்மில் உள்ளனர். ஏதாவது ஒரு போட்டியில் யாராவது ஒரு வீரர் நின்று ஆடிவிடுகிறார் என்பதால் இந்தப் போட்டியிலும் அதையே எதிர்பார்க்கலாம். பிளே ஆப் சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் டு பிளிசிஸ் மிரட்டினார்.
பந்துவீச்சில் டெத் ஓவர் டென்ஷன் இருந்து கொண்டே இருந்தது சிஎஸ்கேவுக்கு. பிராவோ, தாகூர் ஆகியோர் கடைசிக்கட்ட ஓவர்களில் தாராளமாக ரன்களை விட்டுக்கொடுத்ததால் தோனி கடுப்பானார். இப்போது ஒரு வழிக்கு வந்திருக்கிறது பந்துவீச்சும். நிகிடி, தீபக் சாஹர், ஜடேஜா, தாகூர் நம்பிக்கை தருகிறார்கள்.
ஏற்கனவே ஐதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றிலும் புரட்டியெடுத்து இருப்பதால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றது. ஆனால், இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து விட்டது. இதற்கு ஒரே காரணம் அந்த அணியின் ரஷித் கான். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என மூன்றிலும் கலக்கினார் ரஷித். அவர் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-வுக்கு சவாலாக விளங்குவார். அவர் ஆட்டத்தைப் பொறுத்தே இன்றைய போட்டியின் முடிவும் இருக்கும்.
பேட்டிங்கில் கேப்டன் கனே வில்லியம்சனும், தவானும் அந்த அணியின் பில்லர்கள். இவர்களைத் தூக்கிவிட்டால் பேட்டிங்கில் படுத்துவிடுகிறது ஐதராபாத். ஆனால், பந்துவீச்சில் அந்த அணி பக்கா! புவனேஷ்வர்குமார், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோர் சிறப்பாக வீசுகிறார்கள்.
இந்த தொடரில் ஐதராபாத் அணி, சென்னையை வென்றதில்லை. இரண்டு லீக் போட்டியிலும் ஒரு பிளே ஆப் சுற்றிலும் ஐதராபாத்துடன் மோதி யுள்ள சிஎஸ்கே, மூன்றிலும் வெற்றிதான் பெற்றிருக்கிறது. அது சிஎஸ்கேவுக்கு தெம்பாக இருக்கும்.
மும்பை வான்கடே மைதானமும் டாஸும் இன்றைய போட்டியில் முக்கியத்துவம் பெறும். இங்கு இந்த தொடரில் நடந்துள்ள 8 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2 வது பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.
போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.