டெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வில்லியம்சன் 56(39) ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹாசன் 35(32) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணியில் சவுத்தி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
147 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் வோஹ்ரா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, நிதானமாக விளையாடிய பட்டேல் 20 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழக்க பெங்களூரு அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. மந்தீப் சிங்கும், கிரான்ஹோம் இருவரும் இறுதியில் போராடினர். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஸ்குமார் சிறப்பாக பந்து வீசி 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இதனால் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அரைசதம் அடித்த வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 8இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. பெங்களூரு அணி தனது 7-வது தோல்வியை பதிவு செய்து 6வது இடத்தில் இருக்கிறது.