மீண்டும் ஒரு த்ரில்லான மேட்ச் - கடைசி பந்தில் டெல்லி அசத்தல் வெற்றி
ஐபிஎல் போட்டிகள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வெற்றி, தோல்வி கடைசி நேரத்தில், கடைசி ஓவரில், சில நேரங்களில் கடைசி பந்தில் கூட மாறிவிடும். அதனால், பெரும்பாலான போட்டிகள் சுவாரஸ்யமாகவே இருக்கும். அப்படியொரு போட்டிதான் இன்றும் நடைபெற்றது. மும்பை இண்டியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகள் உட்பட 53 ரன்கள் குவித்தார். லெவிஸ் 48(28), இஷான் கிஷன் 44(23) ரன்கள் விளாசினர். ஒரு கட்டத்தில் 15.4 ஓவர்களில் மும்பை அணி166 ரன்கள் எடுத்திருந்த போது, நிச்சயம் 200 ரன்களை அந்த அணி தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா 15 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 3 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி நேரத்தில் மும்பை வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் அந்த அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
195 ரன்கள் இலக்கு என்பதால் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாகவே இருப்பதாக பார்க்கப்பட்டது. 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து கேப்டன் காம்பீர் ஆட்டமிழந்த போதும், ராய் மற்றும் ரிஷப் பண்ட் இணந்து சிறப்பாக விளையாடினர். ராய் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினார். பண்ட் 25 பந்துகளில் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மேக்ஸ்வெல் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த போது டெல்லி அணி 13.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது மீதமுள்ள 46 பந்துகளில் 60 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. விக்கெட்டுகள் விழுந்ததால் ராயும், ஸ்ரேயாஸும் நிதானமான விளையாடினர்.
கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அதிரடியாக விளையாடி 3 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். ஆனால், 18வது ஓவரில் 8 ரன்களும், 19வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இதனால், கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ராய் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரில் விளாசினார். இதனால், 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய எளிதான நிலைக்கு வந்தது. இந்த இடத்தில் இருந்து தான் த்ரில் தொடங்கியது. 3,4,5 என அடுத்தடுத்து மூன்று பந்துகள் டாட் பந்துகள். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்றாகியது. எப்படியோ ராய் ஒரு ரன் அடிக்க டெல்லி அணியின் வெற்றி உறுதியானது. டெல்லி 18 ஓவர்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. இடையில் இரண்டு விக்கெட் அடுத்தடுத்து விழுந்ததால் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போட்டி சென்றுவிட்டது.
7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. 53 பந்துகளில் 91 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.