ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி ஹாட்ரிக் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
பெங்களூரு - மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். தொடரின் 12-வது போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, கெய்ல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 56 பந்தில் 63 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கெய்ல் 27 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மறுமுனையில் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய விராட் கோலி 47 பந்தில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 19 ரன்கள் எடுக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.
அடுத்து 143 ரன்களை இலக்காக கொண்டு மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய படேல் மூன்று ரன்களில் வெளியேற பட்லர் 2 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய பொல்லர்ட், க்ருனல் பாண்ட்யா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய இவர்கள் பின்னர் பெங்களூரு பந்துவீச்சை எளிதில் பவுண்டரிகளாக்கினர். இந்நிலையில் பொல்லர்ட் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்து க்ருனல் பாண்ட்யாவுடன் ஹார்திக் பாண்ட்யா இணைந்தார். முடிவில் மும்பை அணி 18.5 ஓவரில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. க்ருனல் பாண்ட்யா 37 ரன்களுடனும், ஹார்டிக் பாண்ட்யா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணியின் பத்ரீ அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.