டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கடைசி லீக் ஆட்டத்தில், இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது.
ஹைதராபாத் அணி, 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றை உறுதி செய்யும் உத்வேகத்துடன் நடப்புச் சாம்பியனான இந்த அணி களம் காண்கிறது. தோல்வியைத் தழுவினாலும், ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஓர் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பஞ்சாப் அணி, புனேவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்க வேண்டும்.
500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள டேவிட் வார்னரும், சீராக ரன் சேர்க்கும் ஷிகர் தவானும் பேட்டிங்கில், ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். யுவராஜ் சிங், கேன் வில்லியம்சனும் அவ்வப்போது கை கொடுக்கின்றனர்.
நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள புவனேஸ்வர் குமாருடன், இளம் வீரர் ரசித் கானின் பந்து வீச்சை அதிகம் நம்பியிருக்கிறது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, 9 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முனைப்பு காட்டும் எனத் தெரிகிறது. அடுத்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவே அந்த அணிக்கான கடைசி ஆட்டமாக அமையவுள்ளது.