மீண்டும் கைகொடுத்த பாண்ட்யா - பஞ்சாப் அணிக்கு 177 ரன் இலக்கு
மெஹாலியில் நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபில் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரிகளாக விளாசிய ரோகித் 18 பந்துகளில் 32 அன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்ய குமார் யாதவும் 11 ரன்னில் நடையை கட்டினார். ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்தாலும் டி காக் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். டிகாக் 60(39) ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து யுவராஜ் சிங் 18(22), பொல்லார்டு 7(9) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் ஹர்திக் பாண்ட்யா 19 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முருகன் அஸ்வின், முகமது சமி, விஜியோன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த மும்பை அணி, கடைசி 10 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் அந்த அணியால் 200 ரன்கள் எட்ட முடியாமல் போனது.
மும்பை அணியில் 6வது வீரரக களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா அந்த அணி கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கு இறுதியில் உதவியாக உள்ளார். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் 120 ரன்கள் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து மும்பை அணி வலுவான நிலையில் இருந்தது. பின்னர், 162 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்துவிட்டது. ஹர்திக் பாண்ட்யா 19 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க 176 ரன் எட்ட முடிந்தது.
முன்னதாக, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 124 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், 147 ரன்னிற்குள் 7 விக்கெட் சரிந்தது. பின்னர், ஹர்திக் 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசி மும்பை 187 ரன்களை எட்டியது.