டி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்

டி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்
டி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்

டி20 கிரிக்கெட் போட்டிகளின் வருகை சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றி வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சிப்பது உண்டு. சமயங்களில் அந்த விமர்சனம் டி20 போட்டிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுவது உண்டு. 

இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக், பாகிஸ்தானில் பிஎஸ்எல், வெஸ்ட் இண்டீஸில் சிபிஎல், இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என உள்நாட்டு அளவில் உள்ளூர் டி20 போட்டிகள் தொடர்ச்சியாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த வரிசையில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டத்தின் சில நாடுகளும் தனித்தனியே டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அது தவிர இந்த நாடுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் நடத்துகின்றன. 

இந்த டி20 லீக் போட்டிகளுக்கு முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது கிரிக்கெட்டின் தாய் மண்ணான இங்கிலாந்து தான். கடந்த 2003 - 04 இல் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமானது அங்கு தான். டுவென்டி20 கோப்பை என ஆரம்பமான அந்த தொடர் இப்போது டி20 பிளாஸ்ட் என அறிமுகமாகி உள்ளது. தொடர்ந்து நியூசிலாந்து 2005 இல் டி20 லீக் தொடரை நடத்தி இருந்தாலும் உலக அளவில் பரவலான ரசிகர்களின் பார்வையை பெற்றது இந்தியாவில் 2008 இல் ஆரம்பமான ஐபிஎல் தான். அதற்கு முன்னதாக ஐசிஎல் தொடரும் இந்தியாவில் நடத்தப்பட்டது. 

ஐபிஎல் தொடரின் மூலம் ஈட்டிய பிராட்காஸ்டிங் வருவாய், ஏலம், விளம்பர வருவாய், ஸ்பான்சர்களின் வருவாய் என அனைத்துமே பணம் காய்க்கும் மரமாகவே மற்ற நாடுகளின் வாரியத்தால் பார்க்கப்பட்டன. பிசிசிஐ அந்த அளவிற்கு கிரவுண்ட் வொர்க் செய்திருந்தது. அதன் விளைவாக மற்ற நாடுகளும் கோதாவில் இறங்கின.

வளர்ந்து வரும் உள்ளூர் வீரர்களோடு சர்வதேச அளவில் ஜொலிக்கும் உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அணியை பிரித்து போட்டு டி20 லீக் தொடர்கள் அமர்க்களமாக அரங்கேற்றமானது. 

தொடக்கத்தில் ஐசிசி ஒருங்கிணைக்கும் போட்டிகளின் அட்டவணைகளுக்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில் தொடர்கள் நடத்தப்பட்டன. மெல்ல மெல்ல அதன் போக்கு மாற ஆரம்பமானது. குறிப்பாக தேசிய அணிக்காக விளையாடுவதை காட்டிலும் லீக் தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் அதிகம் கிடைக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் மற்ற நாடுகள் நடத்தும் தொடர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தன. அப்படி செய்வதனால் அவர்களுக்கு ஆதாயமும் உண்டு. அதாவது அவர்கள் நாட்டில் தொடர் நடத்தப்படும் போது எந்தவித சிக்கலும் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. 

அனைத்தும் சரியாக நகர்ந்து கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தொடர்களில் தங்களது தலையீட்டை வாரியங்கள் மூலம் ஆரம்பித்தன இந்த உள்ளூர் டி20 போட்டிகள். இந்நிலையில் தான் கொரோனாவால் தள்ளிப்போன 2020 க்கான ஐபிஎல் தொடர் அண்மையில் அமீரகத்தில் நடந்து முடிந்தன. ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடத்தப்பட திட்டமிட்டிருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). ஆனால் அது 2021 நடத்தப்படும் என ஐசிசி அறிவித்ததும் அந்த இடைவெளியை தனக்கான வாய்ப்பாக பிசிசிஐ பயன்படுத்திக் கொண்டது. 

அந்த அறிவிப்பு வெளியான போதே ஐசிசியை தனது முடிவுக்கு (ஐபிஎல் நடத்தும்) சம்மதிக்க செய்துள்ளது பிசிசிஐ என்ற பேச்சும் எழுந்தன. ஐபிஎல் முடிந்த கையோடு பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடரும் நடத்தி முடிக்கப்பட்டது. இப்போது இலங்கையில் லங்கன் பிரிமியர் லீக் தொடரும் நடக்க உள்ளது. 

டி 20 கிரிக்கெட் வரவுக்கு பின்னர் மாறிவரும் கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் வாரியங்களுடன் சேர்ந்து ஆலோசனை கூட்டமும் சில வருடங்களுக்கு முன்பு நடத்தியது. அதில் உள்ளூர் டி20 போட்டிகளால் ஐசிசியின் தொடர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தாக்கம் ஏற்பட கூடாது என தீர்மானமும் போடப்பட்டது. 

இந்நிலையில் சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணி வீரர்களை ஐபில் தொடரில் விளையாட அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். 

“உள்ளூர் டி20 போட்டிகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது தான் எனது விருப்பம். பாக்கெட் முழுவதும் பணத்தை நிரப்பிக் கொள்ள இந்த உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். மேலும் ஐபிஎல் விளையாட தங்கள் வீரர்களை கிரிக்கெட் வாரியங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிப்பதாவே தெரிகிறது. அதை கோலி மாதிரியான வீரர்களும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தான் மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முன் வர வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது உள்ளூர் டி20 போட்டிகள் கிரிக்கெட்டின் வரமா? சாபமா? எனவும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த தொடர்கள் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு துடிப்பு மிக்க வீரர்கள் என்ட்ரி கொடுத்திருந்தாலும் வீரர்களின் காயம் மாதிரியான விஷயங்களை பிரான்சைஸ் அணிகள் மறைப்பதே அதற்கான காரணமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com